1121. கண்ணுதலான் காதல்செய்கோயில்
கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன்
றமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடியபத்து
மிவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும்
புகுவாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: நெற்றியில் கண்ணுடையவனாகிய
சிவபிரான் காதல் செய்யும் கோயிலாகிய திருக்கழுக்குன்றத்தைப்
புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பண் அமைதியோடு
பாடிய தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களையும்
பாடிப் போற்றுபவர் புண்ணியராய்த் தேவர்களோடு
வானுலகம் புகுவர்.
கு-ரை: ஞானசம்பந்தன் பாடிய கழுக்குன்றப்
பதிகத்தைப் பண்ணியல்பால் பாடிய பத்தும் வல்லவர்
புண்ணியராய்த் தேவரோடு உடன் உறைவர் என்கின்றது.
திருஞானசம்பந்தர் புராணம்
சென்றணையும்
பொழுதின்கண் திருத்தொண்டர் எதிர்கொள்ளப்
பொன்றிகழும் மணிச்சிவிகை இழிந்தருளி உடன்போந்து
மன்றல்விரி நறுஞ்சோலைத் திருமலையை வலங்கொண்டு
மின்றயங்குஞ் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்.
திருக்கழுக்குன் றத்தமர்ந்த செங்கனகத் தனிக்குன்றைப்
பெருக்கவளர் காதலினால் பணிந்தெழுந்து பேராத
கருத்தினுடன் காதல்செயுங் கோயில்கழுக் குன்றென்று
திருப்பதிகம் புனைந்தருளிச் சிந்தைநிறை மகிழ்வுற்றார்.
- சேக்கிழார். |
|