பக்கம் எண் :

 104. திருப்புகலி1019


1124. ஆறணி செஞ்சடையா னழகார்புர மூன்றுமன்று வேவ
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை யெம்மிறைவன்
பாறணி வெண்டலையிற் பகலேபலி யென்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே. 3

1125. வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கண் மூன்றுங்
கொள்ள வெரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
அள்ளல் விளைகழனி யழகார்விரைத் தாமரைமே லன்னம்
புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே. 4

__________________________________________________

கு-ரை: மகளிர் விடியலில் இசைபாடிக்கொண்டே எழுந்து சுனையில் நீராடித் தோத்திரிக்க, ஆலைப்புகைபோய் ஆகாயத்தை மறைத்து மாலைக்காலத்தைச் செய்யும் புகலி என்கின்றது. ஏலம் - மயிர்ச்சாந்து. அண்டர் - தேவர்.

3. பொ-ரை: கங்கை சூடிய செஞ்சடையினை உடையவனும், அழகமைந்த முப்புரங்களைத் தீயால் வேவச் செய்தவனும், திருநீற்றைத் தன் திருமேனியில் அழகாகப் பூசியவனும், மேல்நோக்கிய சிவந்த சடையை உடைய எம் இறைவனும், பருந்து சூழும் வெள்ளிய தலையோட்டை ஏந்திப் பகலில் பலி இடுக என்று வந்து நிற்பவனும் வேறுபாடு உடையனவாய்ப் புனையப் பெற்ற கோலத்தினனும் ஆகிய சிவபிரான் விரும்பும் தலம் புகலியாகும்.

கு-ரை: திரிபுரம்வேவ, திருநீற்றை அணியாகப்பூசிய இறைவன் விரும்பும் இடம் புகலி என்கின்றது. அணியாக - ஆபரணமாக. பாறு - பருந்து.

4. பொ-ரை: பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சடைமேல் கரந்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரிமடுத்தவனும் ஆகிய சிவபிரான் குறைவிலா நிறைவோடு உறையும் கோயில், சேறு நிறைந்த வயல்களில் முளைத்த அழகிய மணங்கமழும் தாமரை மலர்கள் மேல் அன்னமும் பிற பறவைகளும் வந்து தங்கிச் செல்லும் புகலிப் பகுதியாகும்.

கு-ரை: கங்கையைச் சடையிற்கரந்தவன் திரிபுரம் தீமடுத்தவன் உறையும்கோயில் புகலிப்பதி என்கின்றது. விரவார் - பகைவர். அள்ளல் - சேறு. தாமரைமேல் அன்னமும் பறவைக் கூட்டங்களும் தங்கி எழும் புகலி என்க.