1126. சூடு மதிச்சடைமேற் சுரும்பார்மலர்க்
கொன்றைதுன்ற நட்டம்
ஆடு மமரர்பிரா னழகாருமை யோடுமுடன்
வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
பாட வினிதுறையும் புகலிப் பதியாமே. 5
1127. மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரிவண்டினங்கள்
வந்து
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
அந்திசெய் மந்திரத்தா லடியார்கள் பரவியெழ விரும்பும்
புந்திசெய் நான்மறையோர் புகலிப் பதிதானே.
6
__________________________________________________
5. பொ-ரை: மதி சூடிய சடையின்
மீது வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர்களைப்
பொருந்துமாறு அணிந்து நடனம் ஆடும் தேவர்பிரானும்,
அழகிய உமையம்மையோடு உடனாய் வேட்டுவக்கோலத்தோடு
தோன்றி அருச்சுனற்கு அருள்புரிய நடந்த வேறுபாடுடையவனும்
ஆகிய சிவபிரானின் குணங்களைப் போற்றித் தொண்டர்கள்
பாட அப்பெருமான் இனிதுறையும் பதி புகலியாகும்.
கு-ரை: மதிசூடிய சடைமேல் கொன்றை
நெருங்க நடனம் ஆடும் பெருமானும், உமையோடும் வேடனாகி
நடந்த இறைவனும் ஆகிய இவர் புகழைத் தொண்டர்கள்
புகழ்ந்துபாட இனிதுறையும் பதிபுகலியாம் என்கின்றது.
6. பொ-ரை: இளமை குன்றாத மரங்களை
உடைய அழகிய சோலையின்கண் மலர்ந்த பூக்களின் தேனில்
பரவிய வரி வண்டுகள் வந்து வளரும் இசையைப் பாட
நடம் பயிலும் பெருமானது இடம், அந்திக் காலங்களில்
செய்யும் சந்தியாவந்தன மந்திரங்களால் அடியார்களாய்ப்
போற்றுவதற்கு நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர்
விருப்போடு தமது புந்தியில் நினைக்கும் புகலிப்
பதியாகும்.
கு-ரை: சோலையில் வண்டினங்கள் இசைபாட
நடம்புரியும் நம்பன் இடம் புகலி என்கின்றது.
மைந்து - இளமை. நந்து இசை - வளரும் இசைகளை,
அந்திசெய் மந்திரம் - சந்தியா மந்திரம். பரவி
- வணங்கி. அந்தி - காலை அந்தி, நண்பகல் அந்தி,
மாலை அந்தி என்பன.
|