பக்கம் எண் :

 104. திருப்புகலி1021


1128. மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேற் றிங்கள்
கங்கை தனைக்கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
அங்கையி னாற்றொழுவா ரவலம் மறியாரே. 7

1129. வில்லிய நுண்ணிடையாளுமையாள் விருப்பனவ னண்ணும்
நல்லிட மென்றறியா னலியும் விறலரக்கன்
பல்லொடு தோணெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்
ஒல்லை யருள்புரிந்தா னுறையும் புகலியதே. 8

__________________________________________________

7. பொ-ரை: உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்பவனும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவனும், நீண்ட சடைமேல் திங்களையும் கங்கையையும் அணிந்தவனும், விடக் கறை பொருந்திய மிடற்றினனும் ஆகிய சிவபிரான் கருதி உறையும் இடமாகிய சிவந்த கயல் மீன்கள் திகழும் நீண்ட வயல்களோடு விளங்கும் திருப்புகலிக்குச் சென்று தம் அழகிய கைகளைக் குவித்து வணங்குபவர் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.

கு-ரை: உமாதேவியை ஒருபால் விரும்பிய மழுவாளனும், கங்கையைச் சடைமேல் மறைத்து வைத்த நீலகண்டனுமாகிய இறைவன் விரும்பிய புகலியைத் தொழுவார்கள் துன்பம் அறியார்கள் என்கின்றது. அவலம் - துன்பம்.

8. பொ-ரை: ஒளி பொருந்திய நுண்ணிய இடையினை உடைய உமையவளிடம் பெருவிருப்பினனாகிய சிவபிரான் எழுந்தருளிய மேம்பட்ட இடம் என்று கருதாது கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனாகிய இராவணனின் பற்களும் தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றி அடர்த்த அளவில் அவன் தன்னைப்புகழ்ந்து பாடக் கேட்டுக் கையில் ஏந்திப் போர் செய்யும் வாளை விரைந்து அருள்புரிந்தவனாகிய சிவபிரான் உறையுமிடம் திருப்புகலியாகும்.

கு-ரை: இறைவன் உமாதேவியோடு எழுந்தருளியிருக்கின்ற இடம் இது என்று அறியாதவனாய்த் தூக்கிய இராவணனை அடர்த்து அருள் புரிந்தான் உறையும் இடம் புகலி என்கின்றது. வில்லிய - ஒளிபொருந்திய, பாடலும் - சாமவேதத்தைப் பாடலும். ஒல்லை - விரைவு.