பக்கம் எண் :

1038திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1151. கோட லிரும்புறவிற் கொடிமாடக்

கொச்சையர்மன் மெச்ச

ஓடு புனல்சடைமேற்

கரந்தான் றிருவூறல்

நாட லரும்புகழான் மிகுஞானசம்

பந்தன்சொன்ன நல்ல

பாடல்கள் பத்தும்வல்லார்

பரலோகத் திருப்பாரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

அறியாமையை உடைய சமண் குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.

கு-ரை: புத்தருக்கும் சமணருக்கும் அருள்செய்த ஈசன் இடம் திருஊறல் என்கின்றது. பொன்னியல் சீவரத்தார் - பொன் போன்ற நிறத்தினையுடைய உடை அணிந்தவர்கள். புளித்தட்டையர் - புளித்த நீரோடு கூடிய பழஞ்சோற்றைத் தட்டில் இட்டு உண்பவர், தென் என; ஒலிக்குறிப்பு, தன்னை உன்ன வினைகெடுப்பான் - தன்னைத் தியானிப்பவர்களின் இரு வினையைக் கெடுப்பவன்.

11. பொ-ரை: செங்காந்தட் செடிகள் நிறைந்த பெரிய புதர்கள் விளங்குவதும் கொடிகள் கட்டிய மாட வீடுகளைக் கொண்டதுமான கொச்சையம்பதிக்குத் தலைவனும், பெருகிவரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனுமாகிய சிவபிரானது திருவூறலைப் பற்றி நாடற்கரிய புகழால் மிக்க ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர்.

கு-ரை: திருஊறலைப் பற்றிய பாடல் பத்தையும் வல்லவர் பரலோகத்து இருப்பார் என்கின்றது. கோடல் - செங்காந்தள். இரும்புறவில் - பெரிய காடுகளை உடைய. நாடல் அரும் - பிறரால் தேடற்கரிய.