1164. நீடலர் கொன்றையொடு நிரம்பா
மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதினல்ல குழையான்
சுடுநீற்றான்
ஆடர வம்பெருக வனலேந்திக்
கைவீசி வேதம்
பாடலி னாலினியா
னுறைகோயில் பாதாளே. 2
1165. நாகமும் வான்மதியுந் நலமல்கு
செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற்
புரமூன்றெரித்துகந்தான்
தோகைநன் மாமயில்போல்
வளர்சாயற் றூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தா
னுறைகோயில் பாதாளே. 3
_________________________________________________
2. பொ-ரை: கொத்தாக நீண்டு அலர்கின்ற
கொன்றையோடு கலைநிறையாத இளம் பிறையை முடியில்
சூடி, ஒரு காதில் வெள்ளைத் தோட்டுடன் மறு காதில்
நல்ல குழையையுடையவனாய் விளங்குவோனும், சுட்ட திருநீற்றை
மெய்யில் பூசியவனும், ஆடும் பாம்பு அணிகலனாகப்
பெருகித் தோன்ற அனல் ஏந்திக் கைவீசி வேதப் பாடல்களைப்
பாடுதலில் இனியனாய் விளங்குவோனும் ஆகிய
சிவபெருமான் உறையும் கோயில் திருப்பாதாளீச்சரமாகும்.
கு-ரை: நிரம்பாமதி - குறைப்பிறை.
வெள்ளைத்தோடு - முத்துத் தோடு. குழை காதணியாகிய குண்டலம்.
3. பொ-ரை: பாம்பு, வானில்
விளங்கும் மதி ஆகியனவற்றைச் சூடிய அழகுமிக்க செஞ்சடையை
உடையவனும், உரிய காலம் கழிய நல்ல மேருவில்லால்
முப்புரங்களை எரித்துகந்தவனும், தோகையை உடைய நல்ல
ஆண்மயில் போன்று வளர்கின்ற கட்புலனாய மென்மையை
உடைய தூய மொழி பேசும் உமையம்மையைத் தன்னோடு
உடனாக இடப்பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவனும் ஆகிய
சிவபிரான் மகிழ்ந்துறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
|