1166. அங்கமு நான்மறையும் அருள்செய்
தழகார்ந்த வஞ்சொல்
மங்கையோர் கூறுடையான்
மறையோ னுறைகோயில்
செங்கய னின்றுகளுஞ் செறுவிற்
றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும்
வயல்சூழ்ந்த பாதாளே. 4
1167. பேய்பல வுந்நிலவப்
பெருங்காடரங்
காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும்
மழுவுந் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும்
பொலிகொன்றைச்
சடைதன்மேற் சேரப்
பாய்புன லும்முடையா
னுறைகோயில் பாதாளே. 5
_________________________________________________
கு-ரை: வான்மதி - வானிலுள்ள பிறை.
சாமம் போக - உரிய காலங்கழிய. தோகை மா மயில் -
ஆண்மயில்.
4. பொ-ரை: ஆறு அங்கங்களையும் நான்கு
வேதங்களையும் அருளிச் செய்தவனும், அழகிய இனிய
சொற்களைப் பேசம் உமைநங்கையை ஒரு பாகமாக
உடையவனும், வேதங்களைப் பாடி மகிழ்பவனுமாகிய சிவபிரான்
உறையும் கோயில் செங்கயல் மீன்கள் புரளும் வயல்களில்
விளங்கும் ஒளியினால் தாமரைகள் எழுந்து மலரும்
வயல்கள் சூழ்ந்த பாதாளீச்சரமாகும்.
கு-ரை: செங்கயல்மீன்கள் புரளும்
வயலில் தாமரை மலரும் பாதாளம் என்கின்றது. செறு -
வயல்.
5. பொ-ரை: பேய்கள் பலவும் உடன்
சூழ, சுடுகாட்டை அரங்காக எண்ணி நின்று, தீ, மான்கன்று
மழு ஆகியவற்றைக் கைகளில் விளங்குவித்து, தேய்ந்த
பிறையும் பாம்பும் விளங்கிய கொன்றை மலரும்
உடைய தன் சடைமேல் பாய்ந்து வரும் கங்கையையும்
உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
|