பக்கம் எண் :

 109. திருச்சிரபுரம்1055


1176. பரிந்தவன் பன்முடி யமரர்க்காகித்
திரிந்தவர் புரமவை தீயின்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே. 3

1177. நீறணி மேனிய னீண்மதியோ
டாறணி சடையின னணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயற் சிரபுரமே. 4

1178. அருந்திற லவுணர்க ளரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே. 5

_________________________________________________

3. பொ-ரை: பல்வகையான முடிகளைச் சூடிய அமரர்களிடம் மிக்க பரிவுடையவனாகி வானவெளியில் திரிந்த அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு வரிந்து கட்டிய கொடிய வில்லைப் பிடித்துக் கொல்லும் அம்பினை ஆராய்ந்து தொடுத்த பெருமானது வளநகர் சிரபுரமாகும்.

கு-ரை: பரிந்தவன் - அன்புகூர்ந்தவன். வரிந்த - கட்டிய. அடுசரத்தை - கொல்லும் பாணத்தை. தெரிந்தவன் - ஆராய்ந்தவன்.

4. பொ-ரை: திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வளைவாக நீண்ட பிறை மதியோடு கங்கையை அணிந்த சடையினை உடையவனும் ஆகிய சிவபிரான், அழகிய அணிகலன்களைப் பூண்ட உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு இனிதாக உறையும் குளிர்ந்த நகரம் சேற்றால் அழகிய வளமான வயல்கள் சூழ்ந்த சிரபுரமாகும்.

கு-ரை: அணியிழை - அணிந்த இழையினையுடையாளாகிய உமை.

5. பொ-ரை: வெல்லுதற்கரிய வலிமையினையுடைய அசுரர்களின் முப்புரங்களும் அழியுமாறு கணையைத் தொடுத்து எரித்த சங்கரனாகிய சிவபெருமானது ஊர், குருந்தமரம் கொடிகளாகப்