பக்கம் எண் :

1108திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


118. திருப்பருப்பதம்

பதிக வரலாறு:

கூற்றுதைத்தார் வீற்றிருக்கும் திருக்கோகரணம் பாடி எழுந்தருளிய பிள்ளையார் திருப்பருப்பதத்தை அடைந்து ‘சுடு மணி யுமிழ் நாகம்’ என்னும் இத்திருப்பதிகத்தைப் பாடிப் பர்வத நாயகரைப் பரவினர்.

பண் : வியாழக்குறிஞ்சி

பதிக எண் : 118

திருச்சிற்றம்பலம்

1271. சுடுமணி யுமிழ்நாகஞ்

சூழ்தர வரைக்கசைத்தான்

இடுமணி யெழிலானை

யேறல னெருதேறி

விடமணி மிடறுடையான்

மேவிய நெடுங்கோட்டுப்

படுமணி விடுசுடரார்

பருப்பதம் பரவுதுமே. 1

__________________________________________________

1. பொ-ரை: மிக்க ஒளியைத் தரும் மாணிக்க மணியை உமிழும் பாம்பை இடையில் பொருந்தக் கட்டியவனும், இரு புறங்களிலும் மணிகள் தொங்கவிடப்பட்ட அழகிய யானையை ஊர்தியாகக் கொண்டு அதன்மிசை ஏறாது ஆனேற்றில் ஏறி வருபவனும், நஞ்சணிந்த மிடறுடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நீண்ட சிகரங்களை உடையதும் ஆங்காங்கே தோன்றும் மணிகள் உமிழ்கின்ற ஒளியினை உடையதுமான திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.

கு-ரை: திருவரையில் நாகத்தைக் கட்டியவர்; யானேயேறாது ஆனேறு ஏறியவர்; நீலகண்டர் எழுந்தருளிய சீபருப்பதத்தைப் பரவுவோம் என்கின்றது.

சுடுமணி - ஒளிவிடுகின்ற மாணிக்கம். அசைத்தான் - கட்டியவன். இடுமணி எழில் ஆனை - இரு மருங்கும் இடம்பெற்ற மணிகளையுடைய யானையை.