பக்கம் எண் :

 130. திருவையாறு1199


1395. விடலேறு படநாக மரைக்கசைத்து

வெற்பரையன் பாவையோடும்

அடலேறொன் றதுவேறி யஞ்சொலீர்

பலியென்னு மடிகள்கோயில்

கடலேறித் திரைமோதிக் காவிரியி

னுடன்வந்து கங்குல்வைகித்

திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்

கீன்றலைக்குந் திருவையாறே. 2

_________________________________________________

கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.

கு-ரை: ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து கபம் மேலிட்டு வருந்துங்காலத்து அபயப் பிரதானம் செய்பவன்கோயில், வலம்வரும் பெண்கள் நடனம் செய்ய, அதற்குப் பக்கவாத்தியமாக முழவு அதிர, அவ்வொலியை மேகத்திடியோசையென மயங்கி, மந்திகள் மரம் ஏறி முகில் பார்க்கும் ஐயாறு என்கின்றது. ஐ - கபம். அலமந்து - சுழன்று. முகில் - மேகம்.

2. பொ-ரை: கொல்லுதலாகிய குற்றம் பொருந்திய படத்தினையுடைய நாகத்தை இடையிற் கட்டி, மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு வலிமை பொருந்திய விடையேற்றின் மேல் ஏறி, அழகிய சொற்களைப் பேசும் மகளிரே! பிச்சையிடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது கோயிலையுடையது. வளைந்த மூக்கினையுடைய கடற்சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு வந்து இரவின்கண் திடலில் ஏறித் தங்கிச் செழுமையான முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறாகும்.

கு-ரை: பாம்பைத் திருவரையிற்கட்டி, மலையரசன் மகளோடும் விடையேறி, அம்மா பிச்சையிடுங்கள் என்னும் அடிகள் கோயில், கடற்சங்கம் காவியோடு மேல ஏறி வந்து முத்தம் ஈன்றலைக்கும் ஐயாறு என்கின்றது.

விடல் - வலிமை. வீடல் என்பதன் விகாரம் எனக்கொள்ளினும் அமையும். அஞ்சொலீர் - அழகிய சொற்களை யுடையவர்களே. கங்குல் - இரவு. திடல் - மேடு. சுரி சங்கம் - சுரிந்த மூக்கினையுடைய சங்குகள்.