பக்கம் எண் :

1204திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1402. மேலோடி விசும்பணவி வியனிலத்தை

மிகவகழ்ந்து மிக்குநாடும்

மாலோடு நான்முகனு மறியாத

வகைநின்றான் மன்னுங்கோயில்

கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்

குவிமுலையார் முகத்தினின்று

சேலோடச் சிலையாடச் சேயிழையார்

நடமாடுந் திருவையாறே. 9

1403. குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு

சாக்கியருங் குணமொன்றில்லா

மிண்டாடு மிண்டருரை கேளாதே

யாளாமின் மேவித்தொண்டீர்

எண்டோளர் முக்கண்ண ரெம்மீச

ரிறைவரினி தமருங்கோயில்

செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள்

வந்தலைக்குந் திருவையாறே. 10

_________________________________________________

9. பொ-ரை: அன்னமாய் மேலே பறந்து சென்று வானத்தைக் கலந்தும், அகன்ற நிலத்தை ஆழமாக அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய நான்முகன், திருமால் ஆகியோர் அறிய முடியாதவாறு ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலையுடையது. கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல் மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும், நடனமாடும் திருவையாறாகும்.

கு-ரை: மேலே பறந்தும் நிலத்தைத் தோண்டியும் தேடிய அயனும் மாலும் அறியாதவண்ணம் அழலுருவானான் அமருங்கோயில், ஐயாறு என்கின்றது. அணவி - கலந்து. கோல் - கூத்தர் கையிற் கொள்ளும் அவிநயக்கோல். கோல் வளை - திரண்டவளை.

10. பொ-ரை: இழிசெயல்களில் ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும், வஞ்சனை பொருந்திய உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு