பக்கம் எண் :

 130. திருவையாறு1203


குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச

மலர்பாய்ந்து வாசமல்கு

தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு

கண்வளருந் திருவையாறே. 7

1401. அஞ்சாதே கயிலாய மலையெடுத்த

வரக்கர்கோன் றலைகள்பத்தும்

மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக்

கருள்புரிந்த மைந்தர்கோயில்

இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ

விளமேதி யிரிந்தங்கோடிச்

செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல

வயல்படியுந் திருவையாறே. 8

_________________________________________________

கு-ரை: வானவீதியில் நெருங்கிவரும் முப்புரங்களையும் அம்புதைக்கும் வண்ணம் வளைத்த வில்லாளி, மலையில் குயில் கூவத் தேன்பாய்ந்து மணம் நிறைந்த தென்றற்காற்று அடிவருடக் கரும்பு தூங்கும் ஐயாறு என்கின்றது. பிரசம் - தேன். இதனால் தென்றற் காற்றின் சௌரப்யம், மாந்தியம் என்ற இருகுணங்களும் கூறப்பட்டன. கண் வளரும் - கணுக்கள் வளரும் என்றுமாம்.

8. பொ-ரை: அஞ்சாமல் கயிலை மலையை எடுத்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தையும் வலிமை பொருந்திய அவன் தோள்களோடு நெரியுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் புரிந்த சிவபிரான் எழுந்தருளிய கோயிலை உடையது. இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற்கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.

கு-ரை: சிறிதும் அஞ்சாது கயிலையைத் தூக்கிய இராவணன் தலைகள் பத்தையும் நெரித்து அவனுக்கு அருள்செய்த மைந்தர் கோயில், தேங்காய் நெற்று வீழ, எருமைக்கன்று பயந்தோடி நெல் வயலை மிதித்துத் தாமரை முளைத்திருக்கின்ற வயலிலே படியும் ஐயாறு என்கின்றது. மஞ்சு - வலிமை. மைந்து என்பதன் திரிபு. இன்சாயல் - இனிய நிழல். இஞ்சாயல் என ஆயிற்று எதுகைநோக்கி. இளமேதி - ஈனாக்கன்றாகிய எருமை. செஞ்சாலி - செந்நெல்.