பக்கம் எண் :

1212திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


தேவாருந் திருவுருவன் சேருமலை

செழுநிலத்தை மூடவந்த

மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ

மேலுயர்ந்த முதுகுன்றமே. 9

1414. மேனியிற்சீ வரத்தாரும் விரிதருதட்

டுடையாரும் விரவலாகா

ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாது

முள்ளுணர்ந்தங் குய்மின்றொண்டீர்

ஞானிகளா யுள்ளார்க ணான்மறையை

முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று

மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து

தவம்புரியு முதுகுன்றமே. 10

_________________________________________________

பொருந்திய திருவுருவை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய மலை, ஊழிக் காலத்து உலகத்தை மூடுமாறு முழங்கி வந்த கடல்நீர் கீழ்ப்படத் தான் மேல் உயர்ந்து தோன்றும் திருமுதுகுன்றமாகும்.

கு-ரை: அயனும், மாலும் ஆழ்ந்தும் உயர்ந்தும் தேடியும் அறியமுடியாத இறைவனிடம், ஊழியில் உயர்ந்த முதுகுன்றம் என்கின்றது. தவிசு - ஆசனம். துழாய் - துளசி. ஓவாது - இடைவிடாது. கழுகு - பறவையின் பொதுப் பெயராய் அன்னத்தை யுணர்த்தியது. ஏனம் - பன்றி.

10. பொ-ரை: உடம்பில் துவராடை புனைந்த புத்த மதத்தினரும், விரிந்த ஓலைத் தடுக்கை உடையாகப் பூண்ட சமணர்களும், நட்புச் செய்து கோடற்கு ஏலாதவராய்த் தங்கள் உடலை வளர்த்தலையே குறிக்கோளாக உடைய ஊனிகளாவர். அவர்கள் சொற்களைக் கேளாது ஞானிகளாக உள்ளவர்களும், நான்மறைகளை உணர்ந்தவர்களும், ஐம்புலன்களை வென்ற மௌனிகளும், முனிவர்களாகிய செல்வர்களும், தனித்திருந்து தவம் புரியும் திருமுதுகுன்றை உள்ளத்தால் உணர்ந்து, தொண்டர்களே! உய்வீர்களாக.

கு-ரை: தொண்டர்களே! புத்தரும் சமணருமாகிய ஊனிகளின் சொற்கொள்ளாது உள்ளுணர்ந்து உய்யுங்கள்! ஞானிகள் வேதத்தையுணர்ந்து ஐம்புலன்களையும் அடக்கி, மோனிகளாய்த் தனித்திருந்து தவம் புரியும் இடம் முதுகுன்றம் என்கின்றது. ஞானி - அறிவை வளர்ப்பவன். ஊனி - உடம்பை வளர்ப்பவன்.