1458. செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற்சிதை யாதன
செல்வன்ஞானசம் பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே. 11
திருச்சிற்றம்பலம்
_________________________________________________
11. பொ-ரை: பொருட் செல்வங்களால்
நிறைந்து விளங்கும் சிவஞானச் செல்வர்கள் வாழும்
திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய, வீடுபேறாகிய
செல்வத்தையுடைய, இறைவன்மீது, அருட்செல்வனாக
விளங்கும் ஞானசம்பந்தன் அருளிய, அழிவற்ற
இச்செந்தமிழ்ப் பாடல்களை ஓதினால், ஓதின
அவர்கட்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும்.
கு-ரை: சிதையாதன செந்தமிழ் இவை
செப்பச் செல்வமாம் எனக்கூட்டுக.
திருஞானசம்பந்தர் புராணம்
பன்னெடுங் குன்றும்
படர்பெருங் கானும் பலபதியும்
அந்நிலைத் தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்திறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக
வாய்மை மறையவனார்
பொன்னியல் வேணிப் புனிதர் பராய்த்துறை யுட்புகுந்தார்.
நீடும் பராய்த்துறை
நெற்றித் தனிக்கண்ணர் கோயில்நண்ணிக்
கூடுங் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் தமிழ்ச்சொன் மாலை
பாடுங் கவுணியர் கண்பனி மாரி பரந்திழியச்
சூடுங் கரதலத் தஞ்சலி கோலித் தொழுதுநின்றார்.
- சேக்கிழார். |
|