136. திருத்தருமபுரம்
பதிக வரலாறு:
திருவேட்டக்குடியை வணங்கிய ஆளுடைய
பிள்ளையார் திருத்தருமபுரத்தை அடைந்தபோது,
திருநீலகண்ட யாழ்ப்பாணரது
தாய்வழிச்சுற்றத்தார் அனைவரும் அவரை
எதிர்கொண்டு வணங்கினார்கள்.
பாணனார், ‘சுவாமிகள்
திருப்பாடல்களை யாழிலிட்டு வாசிக்கும்
புண்ணியப்பேறு பொருந்தினேன்‘ என்று புகன்றார்.
அவர்கள், "நீர் யாழில் இட்டு வாசிப்பதால்
தான் அப்பாடலின் சிறப்பு உலகத்தில்
பரவுவதாயிற்று" என்றார்கள். இதனைக் கேட்ட
பாணர் மனம் நடுநடுங்கி அவர்கள் உண்மை உணர்ந்து
உய்யவேண்டும் என்ற திருவுள்ளத்தால் சம்பந்த
சுவாமிகளின் திருவடியை வணங்கி ‘யாழில் அடங்காத
திருப்பதிகம் ஒன்று அருளிச் செய்யவேண்டும்‘ என்று
கேட்டுக் கொண்டார்.
பிள்ளையார் மக்களது கண்டத்திலும்
யாழிலும் இசை நூலில் சொல்லப்பட்ட
எல்லாமுயற்சியிலும் அடங்காத "மாதர்
மடப்பிடி" என்னும் இப்பதிகத்தை
அருளிச்செய்தார். பாணர் இதனை யாழிலிட்டு
வாசிக்கத் தொடங்கி முடியாமை கண்டு. மனம்
உளைந்து, "இக்கருவியன்றோ இவர்களுக்கு இத்தகைய
எண்ணத்தை அளித்து என்னையும் ஈடழித்தது" என,
அதனை உடைக்கப்புக்கார்.
பிள்ளையார் அதனைத்தடுத்து ‘ஐயரே!
சிவசக்தியின் திருவிளையாட்டெல்லாம்
இக்கருவியில் அமையுமோ? முடிந்த அளவு முயறலே முறை‘
என்று அமைதி கூறி, யாழை அவர் கையில் தந்தார்.
அதனால் இப்பதிகம் யாழ் மூரியாயிற்று. (மூரி -
வலிமை. யாழ்மூரி யாழைக் காட்டிலும் இசைவன்மை
வாய்ந்தது என்பது பொருள்).
|