பண்: யாழ்மூரி
பதிக எண் : 136
திருச்சிற்றம்பலம்
1459. மாதர்ம டப்பிடியும் மட வன்னமு மன்னதோர்
நடையுடைம் மலைமக டுணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசைபாடவு மாடுவ
ரவர்படர் சடைந்நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை
யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சிறைவண்டறை
யெழில் பொழில் குயில் பயில்தருமபு
ரம்பதியே. 1
_________________________________________________
1. பொ-ரை: விரும்பத்தக்க
இளம்பிடியையும், இள அன்னத்தையும் போன்ற
நடையினை உடையவளாகிய பார்வதி தேவியைத் தம்
துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதப்படைகள்
நின்று இசை பாட ஆடுபவரும், விரிந்த சடைகளையுடைய
நீண்ட முடிமீது கங்கையை அணிந்தவரும்
வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய
இறைவர்தம் இடமாக விளங்குவது ஆழ்ந்த கடலின்
வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு
கரையைப் பொருது விளங்கவும், அதன் அயலில் புன்னை
மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய
மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும். அழகிய
பொழில்களில் குயில்கள் பாடவும் விளங்கும்
திருத்தருமபுரம் என்னும் நகராகும்.
கு-ரை: மலைமகளைத் துணையாகக்
கொண்டு மகிழ்ந்தவரும், பூதப்படை இசைபாட
ஆடுபவரும், கங்கைச் சடையரும், வேதத்தையும்
இசையையும் பாடுபவரும் ஆகிய இறைவர் இடம் தருமபுரம்
என்கின்றது.
பிடி - பெண் யானை. உமாதேவியின்
பெருமித நடைக்குப் பெண்யானையும், நடையின்
மென்மைக்கு அன்னமும் உவமமாயிற்று. தருமபுரம்
நெய்தனிலச் சார்புடையதாதலின் புன்னை
கூறப்பட்டது.
|