88. திருக்கயிலாயம்
வடநாட்டுத் தலம்.
இந்திய அரசு ஆண்டுதோறும் கயிலாய தரிசனம்
விரும்பும் அன்பர்களைக் கட்டணத்துடன் தேர்வு
செய்து அழைத்துச் சென்று இந்திய எல்லையில்
கொண்டு வந்து சேர்க்கிறது. நேபாளம் திபெத்து
வழியும் பயணம் செய்யலாம்.
சுந்தரர்
வெள்ளையானைமேல் கயிலை சென்றதும் அப்பர் அடிகள்
உடலுறுப்புக்கள் தேய்ந்தொழியுமளவு மனஉறுதியோடு
கயிலாய யாத்திரை புரிந்ததும் புராண வரலாறுகளிலே
இடம் பெற்றுள்ளன.
ஸ்ரீகயிலாயம்
இமயமலையின் வடசாரலில் மேற்குத் திபெத்தில்
அமைந்துள்ளது. அம்மலையின் தென்பகுதியில்
திருக் கேதாரம் போன்ற தலங்களமைந்துள்ளன.
தேவாரம் பாடிய மூன்று சமயாசாரியர்களுள் சுந்தரர்
கயிலையாத்திரை செய்தார். அப்பரடிகள்
கயிலை யாத்திரை செய்து திருவையாற்றில் கயிலைக்
காட்சியைக் கண்டார். ஞானசம்பந்தர்
திருக்காளத்தி மலையிலிருந்தே
திருக்கேதாரத்தையும், திருக்கயிலாயத்தையும்
பாடியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
கயிலையின் அமைப்பு:
இமய உச்சியின்
வடபாகத்தில் சமுத்திரமட்டத்துக்கு 22,980 அடி
உயரத்தில், தென்திசையை நோக்கியதாகக்
கயிலை அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி
என்றதற்கேற்ப அம்மலை பனிபடர் மலையாகக்
காணப்பெறுகின்றது. 47 கி.மீ. சுற்றளவு
உடையதாய்ச் சமதளமாய் அமைந்துள்ளது.
பிராகாரம் போன்ற மலைச் சுவர்கள் செங்குத்தாக
உள்ளன. அம்மலையில், சதுரம்,
முக்கோணம், வட்டம் போன்ற சித்திர
வேலைப்பாடுடைய மேடைகளும் கைபுனைந்தியற்றாக்
கவின்பெறு வனப்புடையனவாய்க்
காட்சியளிக்கின்றன. இந்தியாவில்
தென்குமரி முதல் இமயம்வரையுள்ள கோபுரங்கள்
எத்தனை வகையுண்டோ அத்தனை மாதிரிக்
கோபுரங்களும் கயிலையில் காணக்கிடக்கின்றன.
இறைவன் அம்மையப்பராய், தக்ஷிணாமூர்த்தியாய்
எழுந்தருளிய திருக்கோலங்களும் இருக்கின்றன.
தீர்த்தங்கள்:
கௌரிகுளம்,
மானசரோவர் போன்ற தீர்த்தங்களும் உள்ளன.
|