பக்கம் எண் :

210தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


பராந்தகன், இராஜராஜன் I, இராஜேந்திரன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I, இராஜேந்திரன் II, விக்ரமசோழன், குலோத்துங்கன் II, இராஜாதிராஜன் முதலிய சோழ அரசருடைய கல்வெட்டுக்களில் திருவிளக்குக்களும் தேவதானங்களும் குறிப்பிடப்படுகின்றன.

தியாகராஜசுவாமிகோயில் இரண்டாம் பிராகார வடசுவரில் உள்ள மனுச்சரிதம் கண்ட கல்வெட்டில் மனுச்சரிதம் முழுவதும் குறிப்பிடப்படுகிறது1.

இத்தலத்தில் தருமை ஆதி குருமூர்த்திகளின் குருமூர்த்தியாகிய கமலை ஞானப்பிரகாசருக்குத் தஞ்சை மன்னனும், கிருஷ்ண தேவராயனும் அளித்த தேவதானங்களும், வீதிவிடங்கப் பெருமானுக்கும் வன்மீகநாதப் பெருமானுக்கும் நித்தியார்ச்சனை, பெருநீராட்டு இவைகளுக்காக அளித்த தேவதானங்களும், இராஜாங்கக் கட்டளை என்ற பெயரோடு விளங்கிவருகின்றன. அவற்றை அவர்கள் குருஞானசம்பந்த சுவாமிகளிடத்தில் ஒப்படைத்துவிட்டார்கள். அது இப்போதும் தருமை ஆதீன நிர்வாகத்திலேயே நடைபெற்று வருகிறது.

இவற்றின் விரிவைத் ‘திருவாரூர்’ என்னும் ஆதீன வெளியீடு 189 இல் காணலாம்.

87. திருக்குற்றாலம்

நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே உள்ளது. நடராஜப்பெருமானுக்குரிய பஞ்ச சபைகளில் சித்திரசபை. திரிகூடராசப்பக்கவிராயர் தலபுராணம் முதலிய பிரபந்தங்கள் எழுதியுள்ளார். சுற்றுலாத் தலங்களில் சிறப்புடையது.

திருமால் வடிவில் இருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியாக மாற்றிய தலம். இங்குள்ள அருவி புகழ் பெற்றது. குற்றால அருவியில் குளிப்பதற்கு ஜுன், ஜுலை, ஆகஸ்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் பலரும் வருவர். திருஞானசம்பந்தர் தேவாரம் பெற்றது. சுவாமி பெயர் குற்றாலநாதர். அம்பாள் பெயர் குழல்வாய்மொழியம்மை. இத்தலம் குறும்பலா எனவும் வழங்கப்பெறும்.

____________

1 164 of 1894.