பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்209


வாத்தியம்:

பஞ்சமுகவாத்தியம், பாரிநாயனம், சுத்தமத்தளம் என்பவை இத்தலத்துக்குச் சிறந்த வாத்தியங்கள்.

தியாகப்பள்ளு, தியாகக்குறவஞ்சி, வீராணுக்கவிசயம் என்பன இத்தலத்தில் ஆடப்பட்ட கூத்துவகை நூல்கள்.

மண்டபங்கள்:

தேவாசிரய மண்டபம், பக்தகாட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், துலாபார மண்டபம், சபாபதி மண்டபம், புராணமண்டபம், இராசநாராயணமண்டபம், தட்டஞ்சுற்றி மண்டபம், வசந்த மண்டபம், திருப்பள்ளித்தாம மண்டபம் முதலிய பல மண்டபங்கள் உள்ளன.

கல்வெட்டு:

சோழர்கள் தம் அரண்மனைத் தெய்வங்களாக வைத்துப் போற்றும் சிவாலயங்களில் இத்தலத்துக் கோயில் முதன்மையானது. இத்தலம் கயாமாணிக்க வளநாட்டைச் சார்ந்த திருவாரூர் என்றும், அதிராஜவளநாட்டைச் சேர்ந்த திருவாரூர் என்றும், க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துத் திருவாரூர் என்றும் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.

இரண்டாம் இராஜாதிராஜன் தன் ஆட்சி 16 ஆம் ஆண்டில் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான். செம்பியன் மாதேவியார் அரநெறிக்கோயிலைக் கற்கோயிலாகக் கட்டுவித்தார். இலக்கம தண்டம நாயக்க உடையாருக்கு நன்றாக, அவர் மந்திரி ஒரு கோபுரம் கட்டினான். இரண்டாம் இராஜேந்திரன் வீதி விடங்கநாதர் கருப்பக்கிருகத்தையும், வன்மீகநாதர் கோயிலையும் பொன் வேய்ந்தான்.

திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களில் விழாக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பெற்றிருந்தன.

நம்பியாரூரர் தாயாரான இசைஞானியார் கௌதமகோத்திரத்தாரான ஞானசிவாசாரியாருடைய புத்திரி என்பதை ஒரு கல்வெட்டறிவிக்கிறது.