ஏனைய
ஆறுவிடங்கர்களும் எழுந்தருள, இவர் இத்தலத்து
நடுநாயகமாக தியாகராஜர் என்ற திருப்பெயரோடு
வீற்றிருக்கிறார்.
இத்தலம் மிகத்
தொன்மையானது. "திருவினாள் சேர்வதற்கு
முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட
நாளே" என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்கு இதனை
மெய்ப்பிக்கும்.
இத்தலத்தில்
பிரமன் கோயில், துருவாச ஆசிரமம்,
பரவையுண் மண்டளி, திருநீலகண்டர் கோயில்,
தண்டபாணி கோயில், பரவையார் கோயில்,
இராஜதுர்க்கை கோயில், நடுவணநாதர் கோயில்,
மாற்றுரைத்த விநாயகர் கோயில், சோமநாதர்
கோயில், குளுந்தாளம்மன் கோயில்,
எல்லையம்மன் கோயில், ஐயனார் கோயில்,
உருத்திரகோடீசுவரர் கோயில், குமரகோயில்,
மாணிக்க நாச்சியார் கோயில் முதலிய
கோயில்கள் காணத்தக்கவை.
தலப்பெயர்:
இத்தலத்துக்குக்
கமலாலயபுரம், க்ஷேத்ரவரபுரம், ஆடகேசுரபுரம்,
மூலாதாரபுரம், சக்திபுரம், கந்தபுரம்
எனப் பல பெயர்கள் இலக்கியங்களில்
வழங்குகின்றன.
தீர்த்தங்கள்:
தேவதீர்த்தம்,
சங்கதீர்த்தம், சரசுவதிதீர்த்தம் முதலிய 21
தீர்த்தங்கள் இருப்பதாகப் புராணங்கள்
புகலுகின்றன.
உட்கோயில்கள்:
திருக்கோயிலுக்குப்
பூங்கோயில் என்று பெயர். கோயிலுக்குள்
அசலேசம், ஆடகேசம், ஆனந்தேசம்,
அருணாசலேசம், விசுவகன் மேகம்,
சித்தீசம் எனப் பல உட்கோயில்கள் உள்ளன.
அவற்றுள் அசலேசம் திருநாவுக்கரசர் பாடல் பெற்றது.
மூர்த்திகள்:
ஐங்கலக்காசு
விநாயகர், வன்மீகநாதர், தியாகேசர்,
வாதாபி விநாயகர், நீலோத்பலாம்பிகை,
விடங்கர், தருணேந்துசேகரர், கமலாம்பிகை,
சுந்தரர், சேரமான் முதலிய மூர்த்திகள்
எழுந்தருளியுள்ளார்கள்.
|