பக்கம் எண் :

 திருஞானசம்பந்தர் வரலாறு215


சிவமயம்

திருஞானசம்பந்தர் வரலாறு

வித்துவான். திரு. வி. சா. குருசாமிதேசிகர் எம். ஏ.,
பேராசிரியர், அனைத்துலகச் சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம்,
தருமை ஆதீனம், தருமபுரம்.

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளை, அருளிச் செய்தவர் திருஞானசம்பந்தர். இவர் தம் அருள் வரலாற்றைப் பெரிய புராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விரித்துரைத்துள்ளார்.

சைவசமய ஆசாரியர்கள் நால்வரில் முதல் ஆசாரியராகவும், அறுபான் மும்மை நாயன்மார்களில் ஒருவராகவும் விளங்கும் இவர் வரலாற்றை முதன்முதல் சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்,

‘வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலால்பேணாத
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்’

எனக் குறிப்பிட்டு அருளியதோடு, தாம் அருளிய தேவாரத் திருப் பதிகங்களிலும் திருஞானசம்பந்தர் பெருமைகளைப் போற்றிப் பாடியுள்ளார்.

திருத்தொண்டர்களின் வரலாறுகளை மேலும் விளக்கி, திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள், இரண்டு பாடல்களில் இவர் வரலாற்றை அந்நூலில் விளக்கியதோடு பதினொராம் திருமுறையில் இலங்கும் ஆறு பிரபந்தங்களில் திருஞானசம்பந்தர்

____________________

குறிப்பு : அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப் பெற்ற பன்னிரு திருமுறை வரலாற்றில் பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் எழுதியதைப் பின்பற்றி இவ்வரலாறு எழுதப் பெற்றுள்ளது.