பக்கம் எண் :

 திருஞானசம்பந்தர் வரலாறு227


போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன், வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞானசம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து ‘உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட்கடலாகிய உனக்கு அழகோ’ என முறையிடும் நிலையில் ‘சடையாயெனுமால்’ எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞானசம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம்புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.

திருஞானசம்பந்தர் திருமருகலில் தங்கியிருந்தபோது, சிறுத்தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். மருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக்காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து ‘அங்கமும் வேதமும்’ என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத் தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச் சுரத்தை வழிபட்டுக் கொண்டு சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். பின்னர் சிறுத்தொண்டருக்கு விடையருளித் திருப்புகலூர் தொழச் சென்றார்.

முருக நாயனார் உபசரிப்பு:

முருக நாயனார் எதிர் கொண்டழைக்கத் திருப்புகலூர் சென்ற ஆளுடைய பிள்ளையார் ஆலயம் சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிப் போற்றி முருக நாயனார் திருமடத்தில் தங்கி யிருந்தார்.

திருநாவுக்கரசர் திருவாரூரில் புற்றிடங் கொண்ட பெருமானை வழிபாடாற்றித் திருப்புகலூரை வழிபட எழுந்தருளினார். அப்பர் வருகையை அறிந்த ஞானசம்பந்தர் அவரை எதிர்கொண்டழைத்து அளவளாவி மகிழ்ந்தார். அப்பர் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை நாளின் சிறப்பை விரித்துரைக்கக் கேட்ட ஞானசம்பந்தர் அப்பரைத் திருப்புகலூரில் இருக்கச் செய்து விற்குடி வீரட்டத்தைப் பணிந்து திருவாரூருக்கு எழுந்தருளினார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த நகர மக்கள் எதிர்கொண்டு போற்றினர். ஞான