பக்கம் எண் :

226திருஞானசம்பந்தர் வரலாறு(முதல் திருமுறை)


அத்திருப்பதிகத்தில் சிறுத்தொண்டர் பக்திச் சிறப்பைப் பாராட்டித் திருமருகல் சென்றடைந்தார்.

விடந் தீர்த்தல்:

திருஞானசம்பந்தர் மருகற் பெருமானை வழிபட்டுச் சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். அப்பொழுது ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்தது.

வணிகன் ஒருவன் தனக்கு முறைப் பெண்ணான கன்னி ஒருத்தியை உடன் அழைத்துக் கொண்டு தன்னூர் செல்பவன், மாலை நேரம் வந்ததால் தன் பயணத்தைத் தொடர முடியாமல் திருமருகல் கோயில் அயலிலுள்ள ஒரு திருமடத்தில் தங்கினான். இரவில் வணிகனை அரவு தீண்டி விட்டது. விடந் தலைக்கேறி மயங்கிச்சோர்ந்தான். அந்நிலையில் அவனுடன் வந்த பெண் மணமாகாத நிலையில் அவனைத் தொட இயலாதவளாய்ப் பெற்றோர்க்குத் தெரியாமல் உடன் போக்காக வந்தவளாதலின் செய்வதறியாது திகைப்புற்று அழுது அரற்றினாள். ஊர்மக்கள் மந்திரம் வல்லாரைக்கொண்டு மந்திரித்தும் பயனின்றிக் கிடந்த வணிகனின் உடல் அருகே இருந்து கதறி அழும் பெண் ‘நஞ்சுண்டு தேவர்களைக் காத்த பெருமானே, மன்மதன் உயிரை அவன் மனைவி வேண்ட அளித்தருளிய கருணையாளனே மார்க்கண்டேயர்க்காக காலனை உயிர்துறக்கச் செய்தருளியவனே என்நாயகனைப் பற்றிய விடவேகம் தணியுமாறும், துன்பக் குழியிலிருந்து நான் கரையேறுமாறும் அருள் புரிய வேண்டும்’ என இறைவனை நினைந்து அழுதரற்றினாள். அவ்வழியில் காலை இளம் போதில் மருகற் பெருமானை வழிபட வந்த திருஞானசம்பந்தப் பெருமானின் திருச்செவிகளுக்கு இவ்அவலக் குரல் எட்டியது. உடன் ஞானசம்பந்தர் அத்திருமடத்தை அடைந்து அவளுக்கு ஆறுதல் கூறி நடந்ததை வினாவினார். அப்பெண் ஞானசம்பந்தரை வீழ்ந்து வணங்கித் தன் வரலாற்றைச் சொல்லலானாள்.

‘வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொருளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு