அந்தணர்களையும் நல்
வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழியனுப்பி வைத்தார்,
யாழ்மூரி பாடியது:
பின்னர் ஞானசம்பந்தர்
திருக்கோழம்பம் வைகல் முதலான தலங்களை வணங்கிக்
கொண்டு திருத்தருமபுரம் சென்றடைந்தார். தருமபுரம்
திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர்,
ஆதலின் அங்கு வாழும் அவரது சுற்றத்தார் ஞானசம்பந்தரையும்,
யாழ்ப்பாணரையும் அன்புடன் வரவேற்றுப் போற்றினர்.
பாணர், தம் உறவினர்களோடு உரையாடுகையில், அவர்கள்
ஞானசம்பந்தரின் திருப்பதிக இசையைப் பாணர் உடனிருந்து
யாழில் வாசித்து வருதலினாலேயே திருப்பதிக இசை
சிறப்படைகிறது என முகமன் உரை கூறினர். அதைக் கேட்டு
மனம் பொறாது ஞானசம்பந்தரை வணங்கித் திருப்பதிக
இசையாழில் அடங்காதது என்பதனை உறவினர்கள்
உணருமாறு செய்தருள வேண்டுமெனப் பணிந்தார். ஞானசம்பந்தர்
கண்டத்திலும் கருவியிலும் அடங்காத இசைக் கூறுடைய
‘மாதர் மடப்பிடி’ என்ற திருப்பதிகத்தை அருளிச்
செய்தார். யாழ்ப்பாணர் அப்பதிக இசை தம்
கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ
உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு
கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார்,
ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில்
அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு
வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு
செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு
அடைந்து ‘போகமார்த்த பூண் முலையாள்’ எனத் தொடங்கித்
திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த
மங்கைக்கு எழுந்தருளினார்.
நீலநக்கர் சிறுத் தொண்டர்
உபசரிப்பு:
நீலநக்கநாயனார் ஞானசம்பந்தரை
எதிர்கொண்டழைத்துத் தம் திருமனையில் திருவமுதளித்து
உபசரித்தார். திருச்சாத்த மங்கையில் அயவந்தி
என்னும் ஆலயத்திலுள்ள இறைவனை வழிபட்டார். அத்தலத்
திருப்பதிகத்தில் நீலநக்கரின் அன்பின் திறத்தைப்
பாராட்டினார். பின்னர்ப் பல பதிகளையும் வழிபட்டுத்
திருச்செங்காட்டங்குடியை அடைந்தார்.
திருச்செங்காட்டங்குடியில்
கணபதீச்சுரம் சென்று ‘பைங்கோட்டு மலர்ப்
புன்னை’ எனத் தொடங்கிப் பதிகம் பாடிப் பரவினார்.
|