அதனை அறிந்த ஞானசம்பந்தர்
அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு
அமரர்களைக் காத்த திருநீல கண்டப் பெருமானைப்
போற்றி ‘அவ்வினைக்கு இவ்வினை’ என்னும் திருப்பதிகம்
அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்கட்கே யன்றி
கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.
முத்துப் பந்தர் பெற்றது:
திருஞானசம்பந்தர்,
திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிக்
கொடுமுடி, வெஞ்சமாக் கூடல், கருவூர் ஆனிலை முதலிய
தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி
முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக்
கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்தார். அப்போது
இளவேனிற் பருவம் தொடங்கியது. திருவலஞ்சுழி
இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி
முற்றத்தையும் பணிந்து நண்பகற்போதில் பட்டீச்சுரம்
வந்தடைந்தார். சிவபூதங்கள் வானத்தில் மறைந்து
நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு
‘இது சிவபெருமான் அளித்தது’ எனக் கூறி ஞானசம்பந்தரின்
சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர்
வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த்
தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச்
சென்றனர். ஞானசம்பந்தர் இறைவனது தடங் கருணையை
வியந்தவாறு ‘பாடல் மறை’ பதிகம் பாடிப் பட்டீச்சுரரை
வழிபட்டு மகிழ்ந்தார்.
உலவாக் கிழி பெறுதல்:
ஞானசம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து
புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கியவராய்த் திருவாவடுதுறை
வந்தடைந்தார். அதுபோது சிவபாத இருதயர், தான்
வேள்வி செய்தற்கு ஏற்ற காலம் இதுவாகும். அதற்குப்
பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார்.
ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள்
இல்லையே என வருந்தியவராய் ‘இடரினும் தளரினும்’
என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார்.
சிவபூதம் ஒன்று ஆயிரம் பொன்னடங்கிய பொற்கிழி
ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில்
உள்ள பீடத்தில் வைத்து ‘இப்பொற்கிழி எடுக்க
எடுக்கக் குறையாத உலவாக் கிழி, இறைவர் இக்கிழியை
உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார்’ எனக் கூறி மறைந்தது.
ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியை தலைமேற் கொண்டு
போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின்
பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள
ஏனைய
|