யாத்திரையை மேற்கொள்ள
எண்ணினார். தன் தந்தையாரிடம் அவ்விருப்பத்தைத்
தெரிவித்தார். சிவபாதஇருதயர் தமது அருமருந்தன்ன
பிள்ளையைப் பிரிய மனமின்றி ‘யான் உம்மைப்
பிரிந்து ஒருகணமும் தரியேன் ஆயினும், இருமை யின்பம்
அளிக்கும் யாகம் ஒன்றையும் செய்ய எண்ணுகிறேன்.
எனவே, சில தலங்கட்கு உம்மோடு வருகிறேன்’, என்று
கூறி விடை யளித்துத் தானும் அவரோடு உடன் சென்றார்.
திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப்
பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார்.
திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்கு வேளூர் முதலிய
தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே
மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந்தார்.
அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி
மழவன் என்பான் முயலகன் என்ற நோயினால் வருந்தி
வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த
இயலாத நிலையில் பாச்சிலாச் சிராமத்து ஆலயத்தில்
இறைவர் திருமுன் கிடத்தியிருந்தான்.
திருஞானசம்பந்தர்
வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில்
அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான்.
ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில்
நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து
அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப்
போக்கியருளுமாறு இறைவனை வேண்டி, ‘துணிவளர்திங்கள்’
என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு
பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப்
போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை
வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக்
கொண்டான்.
பனி நோய் தீர்த்தல்:
பாச்சிலாச் சிராமத்துப்
பரமனைப் பணிந்து போற்றிய ஞானசம்பந்தர் அவ்வூரினின்றும்
புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான தலங்களை
வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டிலுள்ள கொடிமாடச்
செங்குன்றூரைச் சென்றடைந்தார். அங்கு விளங்கும்
மாதொரு பாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை
வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில்
தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் ஆனதால்
அந்நிலத்தின் இயல்புப்படி பனி நோய் என்னும்
குளிர் காய்ச்சல் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி
வருத்தியது.
|