ஞானசம்பந்தர் அவர்களை
நோக்கி வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய்
விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, ‘துஞ்சலும்
துஞ்சல்’ என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும்
உணர்த்தியருளினார்.
அப்பர், சம்பந்தர்
சந்திப்பு:
உபநயனச் சடங்கு முடிந்து
ஞானசம்பந்தர் சீகாழியில் தங்கியிருக்கும்
பொழுது, தில்லை வந்தருளிய திருநாவுக்கரசர் ஞான சம்பந்தரை
இறைவன் ஆட்கொண்டருளிய அற்புத நிகழ்ச்சியைக்
கேள்வியுற்று அவரைக் காணும் பெருவேட்கையோடு சீகாழிப்பதிக்கு
எழுந்தருளினார். கல்லைப் புணையாகக் கொண்டு கடலிடைக்
கரையேறிய நாவுக்கரசர் பெருமைகளைக் கேட்டறிந்திருந்த
ஞானசம்பந்தர் அவர் தன்னைக் காண வருகின்றார்
என்பதை அறிந்து அன்பர்களோடு சென்று அவரை எதிர்
கொண்டு அழைத்தனர். தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனியும்
தாழ்வடமும் நாயகன் சேவடிதைவரும் நெஞ்சும் அன்பு
பாய்வது போல் கண்ணீரும்கொண்டு முதியராய் வந்த
திருநாவுக்கரசரை ஞானசம்பந்தர் வணங்கினார். நாவுக்கரசர்
அவரை வணங்கித் தன்னை வணங்கிய ஞானசம்பந்தரைத்
தம் எழுதரிய மலர்க்கையால் எடுத்து ‘அப்பரே’ என
அழைக்க அவரும் அடியேன் என மகிழ்ந்துரைத்தார்.
இருவரும் அளவளாவி மகிழ்ந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலுக்கு
வந்து வழிபட்டனர். ஞானசம்பந்தர் அப்பரைத் தம்
திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் திருவமுது
கொண்டு அளவளாவி மகிழ்ந்தனர். சிலநாள்கள் சீகாழிப்
பதியில் தங்கிப் போற்றிய அப்பர் பிரியாவிடைபெற்றுச்
சோழ நாட்டுத் திருத்தலங்களை வணங்கப் புறப்பட்டார்.
ஞானசம்பந்தர் சீகாழியில்
தங்கியிருக்கும் நாள்களில் மொழிமாற்று மாலைமாற்று
முதலிய பல திருப்பதிகங்களைச் சித்திரகவிகளுக்குரிய
இலக்கியங்களாகப் படைத்துக் காழி இறைவனைப்
பாடிக் களிப்புற்றார். திருநீல கண்டயாழ்ப்பாணரும்
அவர்தம் துணைவியார் மதங்கசூளாமணியாரும் அப்பதிகங்களை
யாழில் இணைத்து இசைத்து வாழ்ந்து வந்தனர்.
முயலகன் நோய் தீர்த்தல்:
திருஞானசம்பந்தர்
தமிழ் நாட்டிலுள்ள பல தலங்களையும் தரிசித்து வழிபடவும்
ஆங்காங்குள்ள மக்கட்கு அவற்றின் பெருமைகளை அறிவுறுத்தவும்
விரும்பி மிகப்பெரிய தமது ஐந்தாவது தல
|