திருபெண்ணாகடம் ஆகிய
தலங்களை வணங்கிக்கொண்டு திருநெல் வாயில்அரத்துறை
செல்லப் புறப்பட்டார். தந்தையார் தோள்மேல்
அமர்ந்து செல்ல மனம் இன்றித்திருவடி நோக நடந்தே
வருவதைக் கண்ட தந்தையாரும் அடியவர்களும் மிகவும்
பரிவுற்றனர். திருநெல் வாயில் அரத்துறை அணுகிய
போது மாலை நேரம் வந்தது. வழி நடந்த இளைப்பு வர
ஞானசம்பந்தர் அடியவர்களோடு மாறன்பாடி என்ற ஊரில்
தங்கினார்.
அரத்துறை இறைவன் ஞானசம்பந்தரின்
வழி நடைவருத்தத்தை அறிந்து அரத்துறை அந்தணர்கள்
கனவில் தோன்றி ‘ஞானசம்பந்தன் நம்மைக் காண
வருகின்றான். அவனுக்கென ஆலயத்துள் முத்துச்
சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியன வைத்துள்ளோம்
எடுத்துச்சென்று கொடுத்து அழைத்து வருக’ எனப் பணித்தருளினான்,
அவ்வாறே இறைவன் ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி
‘யாம் அளிக்கும் பொருள்களை ஏற்று வருக’ எனக் கூறியருளினான்.
அரத்துறை அந்தணர்கள் வியந்து எழுந்து இறைவனளித்த
அப்பொருள்களைக் கொண்டு சென்று ஞானசம்பந்தரிடம்
நடந்ததைக் கூறிச் சிவிகையில் ஆரோகணித்து அரத்துறை
வரவேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் இறைவன் திருவருளை
எண்ணி வியந்து அச்சிவிகையை மும்முறை வலம் வந்து
பணிந்து ஐந்தெழுத்தோதி அச்சிவிகையில் அமர்ந்து
‘எந்தை ஈசன் எம்பெருமான்’ என்ற திருப்பதிகத்தால்,
இறையருளை வியந்து புறப்பட்டுச் சென்று அரத்துறை
ஈசனை வணங்கிப் போற்றினார். திருநெல்வாயில்
அரத்துறையில் சில நாள் தங்கியிருந்து புறப்பட்டுச்
சிவிகையில் விசையமங்கை, திருவைகா, புறம்பயம், சேய்ஞலூர்,
திருப்பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம் புலியூர்,
வாழ்கொளிப்புத்தூர், கடம்பூர், நாரையூர், கருப்பறியலூர்,
முதலிய தலங்களைப் பணிந்து திருப்பிரமபுரம் மீண்டருளினார்.
இது நான்காவது தலயாத்திரையாகும்.
உபநயனம்:
திருஞானசம்பந்தருக்கு
ஏழாவது வயது தொடங்கியது. வேதியர்கள் தங்கள் குலமரபை
எடுத்துக்கூறி இருபிறப்பாளர் நிலையை விளக்கி
அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச்
செய்து ‘மறை நான்கும் தந்தோம்’ என்றனர்.
பிள்ளையார் இறையருளால் எல்லாக் கலையுணர்வுகளையும்
ஓதாது உணர்ந்தவர். ஆதலின் வேதங்களின் பல பகுதிகளையும்
அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில்
தங்கட்கிருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத்
தெளிவு பெற்றனர்.
|