கழித்து நாளை செல்வோம்
எனக் கூறி அன்றிரவு துயில் கொண்டார். பெருமான்
அவர் தம் கனவில் தோன்றி ‘யாம் தோணியிலமர்ந்த
வண்ணத்தை நாளை நீ வீழிமிழலையிலேயே காணலாம்’
எனக் கூறக் கேட்டு விழித்தெழுந்து நீராடி ஆலயம் சென்றபோது
இறைவன் காழிக் காட்சியை அவ்வாலயத்திலேயே காட்டக்
கண்டு ‘மைம் மருபூங் குழல்’ எனத் திருப்பதிகம்
பாடிப் பரவினார். காழிமக்கட்கு விடை கொடுத்து
அனுப்பிவிட்டு வீழிமிழலையிலேயே தங்கியிருந்தார்.
வாசி தீரக் காசு பெறுதல்:
ஞானசம்பந்தரும் அப்பரும்
திருவீழிமிழலையில் தங்கியிருந்த காலத்து மழையின்மையால்
நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால்
வருத்தமுற்றன. அடியார்களும் துயருற்றனர். அதனை அறிந்த
பிள்ளையார் ‘கண்ணுதலான் திருநீற்றுச்
சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய்
இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப்
பஞ்சம் நீங்கும்கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப்
பலிபீடத்திலும் மேற்குப்பலிபீடத்திலும்
இருவருக்கும் பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி
மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப
மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில்
ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில்
அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத்
தத்தம் திருமடங்களில்அடியவர்களுக்கு அமுதளிக்கச்
செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர்
திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர்
திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப்
பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை
அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார்.
இறைவன் தனக்கு
அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால்
அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று
வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த
ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால்
அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள்
ஆலயம் சென்று ‘வாசிதீரவே காசு நல்குவீர்’ எனத்
திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில்
தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து
மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு
செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.
|