பக்கம் எண் :

230திருஞானசம்பந்தர் வரலாறு(முதல் திருமுறை)


மறைக்கதவம் அடைத்தல்:

ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு போற்றத் திருமறைக்காடு அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகினார்கள். வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக்கதவுகள் திறக்கப்படாதிருத்தலையும் மக்கள் வேறோர் பக்கத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருதலையும் கண்ட ஞானசம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டுமெனத் திருவுளத்தெண்ணி அப்பரைப் பார்த்து ‘இக்கதவுகள் திறக்கத் தாங்கள் திருப்பதிகம் பாடியருளுக’ என வேண்டினார். அப்பர் ‘பண்ணினேர் மொழியாள்’ எனத் தொடங்கித் திருப்பதிகம் பாட அப்பதிகப் பொருட் சுவையில் ஈடுபட்டஇறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் ஆலயம் சென்று மறைக்காட்டுறையும் மணாளனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞானசம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமென வேண்டினார். ஞானசம்பந்தர் ‘சதுரம் மறை’ எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். முதற்பாடலிலேயே கதவு அடைத்துக்கொண்டது. ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைந்தனர்.

வாய்மூரில் இறைவன் ஆடல் காட்டி அருளல்:

அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி ‘நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக’ என அழைத்து முன்னேசெல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலையில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர்சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந்தார்.