பக்கம் எண் :

 திருஞானசம்பந்தர் வரலாறு235


நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப்பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து ‘யான் உய்ந்தேன்’ என்று போற்றினான்.

அனல் வாதம்:

பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்லலாம் என்று எண்ணினார்கள். திருஞானசம்பந்தர் ‘இனி உங்கள் வாய்மையைக் கூறுங்கள்’ என்றார். சமணர்கள் ‘இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம்’ என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டியன் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான்.

ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர் நள்ளாற்றிறைவனைப் போற்றி அவ் ஏட்டினை எடுத்து அத்திருப்பதிகம் அனலிடை வேகாதிருக்க வேண்டி ‘தளிரிள வளரொளி’ என்றதொரு திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது. சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது முன்னையினும் பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப்பெறுவதாயிற்று.

புனல்வாதம்:

சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ‘ஓர் வாதிகனை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்’ என்றனர் அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார்.