பக்கம் எண் :

 திருஞானசம்பந்தர் வரலாறு241


நெறி மரபை அவருக்கு உணர்த்தியதோடு பூம்பாவையை யாம் மீண்டும் உயிர்ப்பித்தோம் ஆதலின் அவள் எமக்கு மகளாவாள் எனக்கூறிய அளவில் சிவநேசர் மனத் தெளிவுற்று அப்பெண்ணை வேறொருவர்க்கு மணம் முடிக்க மனமின்றிக் கன்னிமாடத்தே இருக்கச்செய்தார். பின்னர் பூம்பாவையும் சிவன் அருளையே சிந்தித்துச் சிவனடி கூடினார்.

பின்னர் ஞானசம்பந்தர் மயிலாப்பூரினின்றும் புறப்பட்டுத் திருவான்மியூர், இடைச்சுரம், திருக்கழுக்குன்றம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு தில்லையை அடைந்து திருச்சிற்றம்பலம் உடையானைப் போற்றி சீகாழிக்கு எழுந்தருளிப் பிரமபுரத்துப் பெருமானைப் போற்றித் தம் திருமாளிகையை அடைந்தார். இது ஞானசம்பந்தரின் ஆறாவது தல யாத்திரையாகும்.

திருமணம்:

ஞானசம்பந்தரைக்காணும் பெருவேட்கையில் முருக நாயனாரும் நீலநக்க நாயனாரும் சீகாழி வந்தனர். சிவபாத இருதயரும் சுற்றத்தாரும் ஞானசம்பந்தர் புண்ணியப் பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒரு கன்னியைத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டினர். ஞானசம்பந்தர் முதலில் மறுத்தார். ஆயினும் திருவருளை நினைந்து மறைவாழவும் அந்நெறியின் துறைவாழவும் திருமணத்திற்கு இசைவு தெரிவித்தார்.

சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழாவினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத்தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத்திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர்கள் வேண்டக் கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப்பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞானசம்பந்தரை நோக்கி ‘யான் பெற்ற அருநிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன் என உரைத்தார். மங்கல மகளிர் மணப்