பெண்ணை அழைத்து
வந்து ஞானசம்பந்தரின் வலப்பால் அமரச்
செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி
திருமணச்சடங்குகளை நிகழ்த்தினார்.
ஞானசம்பந்தர் காதலியாரைக் கைப்பற்றித்
தீவலம் வரும்போது ‘விருப்புறும் அங்கியாவார்
விடை உயர்த்தவரே’ என்னும் நினைவினராய்’ ‘இருவினைக்கு
வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து
கொண்டதே இனி இவளோடும் அந்தமில் சிவன்தாளை
அடைவோம்’ என உறுதி கொண்டு திருப்பெருமணக்
கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று ‘கல்லூர்ப்
பெருமணம் வேண்டா’ எனத் தொடங்கித்
திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது
சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி
நின்று ‘ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும்
திருமணம் காணவந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து
சேர்மின்’ எனக் கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும்
காட்டி நின்றார். ஞானசம்பந்தர் ‘இம்மண
விழாக்காண வந்தோர் அனைவரும் இச்சோதியுட்
புகுமின்’ எனக்கூறி காதலாகி எனத் தொடங்கும்
நமச்சிவாயத் திருப்பதிகம் அருளி நின்றார்.
திருநீல நக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர்
நம்பாண்டார் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர்
முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட்
புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து
வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள்
முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின்
திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக்
கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம்
வந்து அதனுள்ளே புகுந்து பெருமானோடு ஒன்றி
உடனானார்.
"காதலியைக்
கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித்
தீதகற்ற வந்தருளும்
திருஞான சம்பந்தர்
நாதனெழில்
வளர்சோதி நண்ணியதன் உட்புகுவார்
போதநிலை
முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்."
அச்சோதி மறைய
பெருமணக்கோயில் முன்போலவே அமைந்தது.
அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை
அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப்
போற்றினர்.
காலம்:
திருஞானசம்பந்தர்
கி.பி. 7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்
தமிழகத்தே வாழ்ந்த திருவருட்செல்வராவார்
என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஒப்ப முடிந்த
உண்மையாகும்.
|