திருநாவுக்கரசரும்
திருஞானசம்பந்தரும் சம காலத்தவர் என்பது அவர்
தம் வரலாறுகளால் நன்கினிது விளங்கும்.
திருநாவுக்கரசர் காலத்தில் குணபரன் என்ற
சிறப்புப் பெயரோடு வாழ்ந்த பல்லவன்
மகேந்திரவர்மன் ஆவான். இவன் காலம் கி.பி. 600
முதல் 630 வரை ஆகும். திருஞானசம்பந்தர் காலத்தில்
வாழ்ந்த நாயம்மார்களில் சிறுத் தொண்டர்
என்னும் பரஞ்சோதியார் மகேந்திரவர்மனின்
புதல்வனான நரசிம்ம வர்மப் பல்லவன் காலத்தில்
படைத்தளபதியாயிருந்து சாளுக்கியரோடு
வாதாபியில் நிகழ்த்திய போரில் வெற்றி
கண்டவர். அதன் பின்னரே அவர்
திருச்செங்காட்டங்குடி சென்று சிவனடித் தொண்டு
பூண்டு அடியவராக விளங்கினார். நரசிம்மவர்மன்
வாதாபிப் போர் நிகழ்த்திய காலம் கி.பி. 642
ஆகும்.
திருஞானசம்பந்தரால்
வெப்புநோய் தவிர்த்தருளப் பெற்ற பாண்டிய
மன்னன் நெடுமாறன் மாறவர்மன் அரிகேசரி என்ற
பெயருடையவன். மங்கையர்க்கரசியாரின் மணாளனாக
விளங்கிய இம்மன்னன் காலம் கி.பி 640 - 670.
இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு எண்ணுங்கால்
திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம்
நூற்றாண்டின் இடைப்பகுதியேயாகும் என்பதை ஐயம்
இன்றித் துணியலாம்.
திருஞானசம்பந்தர் துதி
பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனம்
சூழ்ந்த சிரபுரத்துத் திருஞான சம்பந்தப்
பெருமானைத் தேய மெல்லாம் குரவையிடத்
தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீ
பத்தை விரவிஎமை ஆளுடைய வென்றிமழ
இளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.
-
சிவஞானமுனிவர். |
|