பக்கம் எண் :

 1. திருப்பிரமபுரம்257


இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான் - பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு.

இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் "விடையேறி" என்பது நித்யத்தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், "மதிசூடி" என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், "பொடிபூசி" என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், "கள்வன்" என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், "அருள்செய்த" என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்.

ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், ‘தோடுடைய செவியன்‘ முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், ‘பிரமாபுரம்‘ ‘விடையேறி‘ முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், ‘விடையேறி‘ ‘பொடிபூசி‘ ‘உள்ளங்கவர்கள்வன்‘ என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் "மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை" என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச் சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய "த்" என்பதோடு சேர்த்து ‘தோ‘ என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் "உலகெலாம்" என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு.

தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள்,

தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோ தயாத்

- காயத்திரி