பக்கம் எண் :

26ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை(முதல் திருமுறை)


தேவாரம் என்ற சொல் வழிபாடு என்ற பொருளிலும் வழங்கி உள்ளது. வாரம் என்பது முதல்நடை, வாரம், கூடை, திரள் என்னும் இசை இயக்கம் நான்கினுள் ஒன்று. மந்தநடை முதல்நடை எனவும், விரைந்தநடை திரள் எனவும், இவ்விரண்டிற்கும் இடைநிகர்த்ததாய்ச் சொல்லொழுக்கும், இசையொழுக்கும் பொருந்திய இசைப்பாடல் வாரம் எனவும், சொற்செறிவும், பொருட்செறிவும் உடைய பாடல் கூடை எனவும் அடியார்க்கு நல்லார் உரை, விளக்கம் தருகிறது. எனவே, வழிபாட்டிற்குரிய இனிய இசைப்பாடல் என்பதே தேவாரம் என்பதன் பொருளாக அறியப்பெறுகிறது.

தேவாரம் என்னும் பெயர்வழக்கு, இரட்டைப் புலவர்கள் பாடியுள்ள ஏகாம்பரநாதர் உலாவில்தான் இலக்கியத்தில் முதன்முதலில் காணப்படுகிறது. "மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும், தேவாரம் செய்த திருப்பாட்டும்..." என்பது அவ்வுலாத் தொடராகும்.

தெய்வக்குடிச் சோழர்:

திருமுறைகளில் தேவாரம் மட்டும் அடங்கன் முறை என்று வழங்கி வருகிறது. தேவாரம் திருமுறை இரண்டையும் சேர்த்துத் தேவாரத் திருமுறை என்றும் இதனைக் கூறுவர். இவ்வரிய கருவூலத்தை நமக்கெல்லாம் கிடைக்க வழி செய்த பெருமை இறையருளால் சோழ மன்னர்களுக்கே வாய்த்தது. இதனாலேதான் திருமுறையை வகுத்தளித்த நம்பியாண்டார் நம்பிகள், திருத்தொண்டர் திருஅந்தாதியில், கோச்செங்கட் சோழ நாயனார் வரலாற்றில், "மை வைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறி கருதாத், தெய்வக் குடிச் சோழன்" என்று கூறி அருளினார்.

திருமுறைகண்ட சோழன் யார்?:

சோழர்கள்தான் திருமுறைகளை முதன்முதல் கண்டும் கேட்டும், அவற்றைத் திருக்கோயில்களில் ஓதுவதற்கு நிவந்தம் அளித்தும் போற்றினர் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.

முதலாம் ஆதித்த சோழன் ஆட்சிக் காலம் கி.பி. 873இல் திருஎறும்பியூரிலும், கி.பி. 876இல் பழுவூரிலும் கோயில்களில் திருப்பதிகம் ஓத நிவந்தம் அளித்தமை அவ்வத்தலக் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.

முதல் பராந்தக சோழன் ஆட்சிக்காலம் கி.பி. 910இல்