எனப்படும். முறை என்ற சொல்,
நூல் என்ற பொருளில் கந்த புராணத்துள் வந்துள்ளமையைக்
காணலாம்.
"இறைநிலம் எழுதுமுன் இளைய
பாலகன்
முறைவரை வேன்என முயல்வது
ஒக்குமால்"
என்பது கந்தபுராண
அவையடக்கப் பாடல் பகுதி.
மேலும் திரு என்ற சொல்லுக்கு,
‘கண்டாரால்
விரும்பப்படும் தன்மை நோக்கம்’ என்று திருக்கோவையாருக்கு
உரை கண்ட பேராசிரியர் குறிப்பிடுவதும் கொள்ளத்தக்கதே.
என்னை? குழந்தை, யானை என்பனவற்றை எத்துணைப்
பெரியவர்களாயினும் எத்துணைச் சிறியவர்களாயினும்
காணுந்தோறும், காணுந்தோறும் விருப்பம்
கொள்வர். அதுபோல் சத்து, சித்து,
ஆனந்தமாக இருக்கும் பரம் பொருளையும் துன்புறுவோர்
இன்புறுவோர் யாவராயினும் நினையுந்தொறும்,
காணுந்தொறும், பேசுந்தொறும்
விருப்புற்றிருப்பரே அன்றி வெறுப்புற்றிருப்பாரல்லர்
என்பதும் அறிந்து இன்புறத்தக்கது.
தேவாரம்:
இனி இத் திருமுறைகளுள்
சம்பந்தர்,
அப்பர், சுந்தரர் பாடல்களைத் தேவாரம் என்று
அழைக்கிறோம்.
தேவ - ஆரம் என்று இதனைப் பிரிக்கலாம்.
தெய்வத்திற்கு மாலை போல்வது என்பது இதன்
பொருள். மலரை இணைத்து மாலையாகச் சூட்டுவது
போல, சொற்களை இணைத்துச் சொல்மாலையால்
புகழே மணமாக இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றபொருளில்
இப்பெயர் அமைந்திருத்தலைக் காணலாம்.
தே - வாரம் எனப் பிரித்தால் தெய்வத்திடம்
அன்பை விளைவிப்பது எனப்பொருள்படும். வாரம்
- அன்பு. "வாரமாய் வணங்குவார் வல்வினைகள்
மாயுமே" என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.
மேலும், வாரம் - உரிமை.
இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பை - உரிமையை
உள்ளவாறு தெளிவித்து உயிர்கள் பயன்பெற உதவும்
பாடல்கள் கொண்ட நூல் என்ற பொருளும் இதற்கு உண்டு
என்பதைக் காணலாம்.
|