பக்கம் எண் :

24ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை(முதல் திருமுறை)


அதிலும் அரன் அன்று முதல் இன்று வரை தானே பிரமம் என்று தருக்கியவர் அல்லர். அதனாலேயே அரனே சிவம் எனப் போற்றப்படுகிறார். இவ்விரு அரியும் அயனும் கூட ஒருகற்பத்திலேதான் இவ்வாறு தருக்குற்றனர்.

தருக்குற்றார் இறைவனைக் காண இயலாது என்பதைத்தான் திருமுறைகள் திருமாலும் பிரமனும் தேடிக் காணாதவர் என்று பேசுகின்றன.

இறைவனே மூவரும் ஆயினமையைத் திருநாவுக்கரசர்,

‘ஒருவனாய் உலகேத்த நின்றநாளோ,
ஓருருவே மூவுருவம் ஆனநாளோ?’

என்ற கேள்வியால் விளக்கிப் போந்தார். இன்னோரன்ன குறிப்புக்களால் இறைவன் ஒருவனே என்பதும், அவன் தானும் தன்சக்தியுமாய் இருதன்மைப்பட்டு இயங்கியும் உலகத்தை இயக்கியும் வருகிறான் என்பதும், அவனே மூவராயும் மூவருக்கும் மேலாக மூவர்கோனாயும் விளங்குகிறான் என்பதும் புலப்படும்.

இவ்வரிய கருத்துக்களை எல்லாம் பன்னிரு திருமுறைகள் பல இடங்களிலும் தெளிவு படுத்துகின்றன.

திருமுறை:

திருமுறை என்ற சொல், திருவை அடையச் செய்யும் நூலுக்குப் பெயராயிற்று. திரு என்பது சிவம். ‘சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்’ என்பது மணிவாசகர் திருவாக்கு. அவர் சிவத்தைத் திரு என்றே குறிப்பிடுகிறார்.

‘திரு’ என்ற சொல்லுக்கு உண்மை, அறிவு, ஆனந்தம் என்ற மூன்று பொருளும் உண்டு. சிவபரம்பொருளைச் சச்சிதானந்த வடிவமாகக் காட்டுகின்றன ஞானநூல்கள். சத் - உள்ளது, சித் - அறிவு, ஆனந்தம் - இன்பம். இம்மூன்றையும் உடையது எதுவோ அதுவே உண்மைத் திரு எனப்படும். சத் என்பது சிவம், சித் என்பது உமாதேவி, ஆனந்தம் என்பது முருகன். எனவே, உண்மை, அறிவு, இன்பம் இம் மூன்றும் நிறைந்ததே முழுமையான பரம்பொருளாகும்.

இப்பரம்பொருளை அடைய வழி கூறும் நூலே திருமுறை