அப்பரசிவம் தயாமூலதன்மம்
என்னும் தத்துவத்தின் வழிநின்று பராசக்தியை நோக்க, அப்பராசக்தி
தன் நிலையினின்றும் இறங்கி ஆதிசக்தியாய்,
தன் சக்தியில் பலகோடியில் ஒரு கூறு சக்தியால்
அயன், அரி, அரன் என்னும் முதல் மூவரைப்
படைத்து, முறையே படைத்தல், காத்தல்,
அழித்தல் ஆகிய முத்தொழிலைச் செய்விக்கின்றது.
இதுவே தடத்த நிலையாகும்.
இதுபற்றியே அபிராமிப்பட்டர்
அம்மையை
"முதல் மூவருக்கும் அன்னே" என்று அருளினார்.
திருவிளையாடற் புராண
ஆசிரியர் பரஞ்சோதி
முனிவரும், "மெய், போதம், இன்பம்
ஆம் வண்ணம் மெய் (உருவம்) கொண்டவனாகிய
பெருமான் தன் வலியாகிய ஆதிசக்தியின் ஆணைதாங்கி
மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்ய
வாளாமேவு அண்ணல்" என்றமையாலும் இக்கருத்துப்
புலனாகும்.
இதனை ஞானசம்பந்தர்
‘ஒருவிண்
முதல் பூதலம் படைத்தளித்து அழிப்ப மும்மூர்த்திகளாயினை’
என்றார்.
சம்புபட்சமும், அணுபட்சமும்:
சம்பு - இறைவன், இன்பத்தின் ஊற்றுக்
கண்ணாயிருப்பவர். இங்குக் குறித்த அயன்,
அரி, அரன் ஆகிய மூவரும் இறைவனுடைய சக்தியே
ஆவர். இது சம்புபட்சம். இறைவனே அயன்,
அரி, அரன் ஆன நிலை.
இம்மூவரும் தவறு செய்தவர் அல்லர்.
இவர்கள் படைப்பின் பயனால் உயிர்களிற் சில,
புண்ணியச் செயற்பாட்டால் உயர்ந்து, இப்பதவியைப்
பெற்றுப் படைத்துக் காத்து அழித்தலைச் செய்தன.
இவ்வான்மாக்கள் அணுபட்சத்தினர் எனப்படுவர்.
அஃதாவது உயிர் வர்க்கத்தினர். ஆணவ மலமறைப்பால்
வியாபகம் இன்றி அணுத் தன்மை எய்தியிருப்பதால்
உயிர் அணு எனப் பெற்றது.
அயனும் அரியும்:
இம்மூவரில் அயனும்
அரியுமே நானேபிரமம் என்று தருக்கியவர்கள். இறைவன் சோதியாய்த்
தோன்றியபோது அடிமுடி தேடி இளைத்தவர்கள்.
|