4. திருப்புகலியும்
திருவீழிமிழலையும்
பதிக வரலாறு:
திருஞானசம்பந்தப்பிள்ளையார்
திருப்பேணு பெருந்துறையும், திருத்திலதைப் பதியும்
வழிபட்டுத் திருவீழிமிழலைக்கு மீட்டும்
எழுந்தருளி அங்கே வீற்றிருக்கின்றார்கள்.
அப்போது சீகாழிப் பதியிலுள்ள அந்தணர்கள்
வீழிமிழலைக்கு வந்து பிள்ளையாரைச் சீகாழிக்கு
எழுந்தருளும்படி வேண்டிக் கொள்கின்றனர்.
சுவாமிகள் ‘தோணிநாதர் கழலிறைஞ்ச, நாளைக்கு
வீழிநாதன் அருள்பெற்றுப்போகலாம்‘ என்றருளிச்
செய்திருந்தனர். அன்றிரவு சுவாமிகள் கனவில்,
‘தோணியில் நாம் அங்கிருந்தவண்ணம் தூமறைவீழி
மிழலை தன்னுள், சேணுயர் விண்ணின் இழிந்த இந்தச்
சீர்கொள் விமானத்துக் காட்டுகின்றோம்
பேணும்படியால் அறிதி‘ என்று காழிநாதர்
திருவாய்மலர்ந்தனர். இதனை அறிந்த சுவாமிகள்
விம்மிதமுற்று, விடிந்ததும் எழுந்து திருமஞ்சனம்
முடித்து வீழிக் கோயிலில் விண்ணிழி
விமானத்துட்சென்று வணங்கினார். அங்கே
திருத்தோணியிற் காணுந்திருவோலக்கத்தைக் கண்டு
வியந்து வினாவுரையாக ‘மைம்மரு பூங்குழல்‘ என்ற
இந்தத் திருப்பதிகத்தைப் பாடியருளுகிறார்கள்.
இத்திருப்பதிகத்தின்
ஒன்பதாம் பாடலில் வீழிமிழலையில் பெருமான்
‘எறிமழு வோடிள மான்கை யின்றி‘ இருந்த பண்டைய
நிலையைக் கூறி மகிழ்கிறார்கள்.
காழிக்காட்சியாகச் சுவாமிகள் வீழியிற்
கண்டதைச் சேக்கிழார்பெருமான் ‘மறியுற்ற
கையரைத் தோணிமேல் முன் வணங்கும்படி அங்குக்
கண்டு‘ என்று குறிப்பிடுகின்றார்கள். இது
அறிஞர்க்குப் பெருவிருந்தாகும்.
வினாவுரை: -
காழியில் அம்மையப்பராக எழுந்தருளியிருக்கும்
காட்சியை வீழிமிழலையிற்காட்ட, தரிசித்த
சம்பந்தப் பெருமான் வினாவாக உரைத்தன.
|