35. கழன்மல்கு
பந்தொடம் மானைமுற்றில்
கற்றவர்
சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழின்மல்கு
கிள்ளையைச் சொற்பயிற்றும்
புகலி நிலாவிய
புண்ணியனே
எழின்மல
ரோன்சிர மேந்தியுண்டோ
ரின்புறு செல்வமி
தென்கொல்சொல்லாய்
மிழலையுள் வேதிய
ரேத்திவாழ்த்த
விண்ணிழி
கோயில் விரும்பியதே. 2
__________________________________________________
மொழி
நான்மறையோர்" என வீழி அந்தணர்களை
உடன்பாட்டு முகத்தால் கூறியுள்ள நுண்மை காண்க.
"பொய்யர் உள்ளத்து அணுகானே" என்ற
அருணகிரிநாதர் வாக்கினையும் இதனோடு இணைத்து
எண்ணுக.
சீனயாத்திரீகன்
யுவான்சுவாங் என்பவன் தனது யாத்திரைக்
குறிப்பில் பொய், களவு, சூது, வஞ்சகம்
இல்லாதவர்கள் என இந்தியரின் சிறப்பைக்
குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாம்.
ஞானசம்பந்தர் காலமும் யுவான்சுவாங் காலமும்
கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆகும்.
2. பொ-ரை:
மகளிர்க்குப் பொருந்திய கழங்கு, பந்து, அம்மானை,
முற்றில் ஆகிய விளையாட்டுக்களைக் கற்ற
சிற்றிடைக் கன்னிமார்கள், சோலைகளில்
தங்கியுள்ள கிளிகட்குச் சொற்களைக் கற்றுக்
கொடுத்துப் பேசச் செய்யும் திருப்புகலியில்
விளங்கும் புண்ணியனே! அழகிய தாமரை மலரில்
விளங்கும் பிரமனது தலையோட்டில் பலியேற்றுண்டு
இன்புறும் செல்வனே! திருவீழிமிழலையில்
வேதியர்கள் போற்றித் துதிக்க விண்ணிழி
கோயிலை நீ விரும்பியதற்குக் காரணம் என்ன?
சொல்வாயாக!
கு-ரை: கழல், பந்து,
அம்மானை, முற்றில் முதலிய மகளிர் விளையாட்டுப்
பொருள்கள் குறிக்கப் பெறுகின்றன.
கழல் -
கழற்சிக்காய். முற்றில் - முச்சி(சிறுசுளகு),
கன்னியர், சோலையிலுள்ள கிளிகட்குச் சொல்
கற்றுக்கொடுக்கும் புகலி. எழில் - அழகு. மலரோன் -
பிரமன். ஓர் - அசை. விண்ணிழிகோயில் -
வீழிமிழலையிலுள்ள கோயிலின் பெயர்.
|