திருஎருக்கத்தம்
புலியூரை வணங்கிப் பதிகம்பாடிப் புறப்பட்ட ஆளுடைய
பிள்ளையார் இடையிலுள்ள தலங்கள் பலவற்றையும்
வணங்கித் துதித்துத் திருமுதுகுன்றம் என்னும்
விருத்தாசலத்தை அடைந்தார். போகின்ற
வழியிலேயே முதுகுன்ற நாதருடைய அருட்செயல்களும்,
ஆட்கொள்ளுந் திறனும், இயற்கை வளமும், நதியின்
செலவும் மனத்தைக் கவர அவற்றை அமைத்து
‘மத்தாவரை நிறுவி‘ என்னும் பதிகத்தைத்
தொடங்கி: ‘முத்தாறு வந்தடி சூழ்தரு
முதுகுன்றடைவோம்‘ என அருளிச் செய்கின்றார்.
பண் : நட்டபாடை
பதிக எண்: 12
திருச்சிற்றம்பலம்
119. மத்தாவரை
நிறுவிக்கடல்
கடைந்தவ்விட
முண்ட
தொத்தார்தரு
மணிநீண்முடிச்
சுடர்வண்ணன
திடமாம்
கொத்தார்மலர்
குளிர்சந்தகி
லொளிர்குங்குமங்
கொண்டு
முத்தாறுவந்
தடிவீழ்தரு
முதுகுன்றடை வோமே.
1
__________________________________________________
1. பொ-ரை: மந்தர
மலையை மத்தாக நட்டுக் கடலைக் கடைந்தபோது,
கொடிது எனக் கூறப்பெறும் ஆலகால விடம் தோன்ற,
அதனை உண்டவனும், பூங்கொத்துக்கள் சூடிய அழகிய
நீண்ட சடை முடியினனும், எரி சுடர் வண்ணனும் ஆகிய
சிவபெருமான் எழுந்தருளிய இடம்; மலர்க்
கொத்துக்கள் குளிர்ந்த சந்தனம் அகில் ஒளிதரும்
குங்கும மரம் ஆகியவற்றை அலைக்கரங்களால்
ஏந்திக் கொண்டு வந்து மணிமுத்தாறு அடிவீழ்ந்து
வணங்கும் திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.
கு-ரை : வரை மத்தா
நிறுவி - மந்தரமலையை மத்தாக நிறுத்தி.