120. தழையார்வட
வியவீதனில்
தவமேபுரி சைவன்
இழையாரிடை
மடவாளொடும்
இனிதாவுறை விடமாம்
மழைவானிடை
முழவவ்வெழில்
வளைவாளுகி ரெரிகண்
முழைவாளரி
குமிறும்முயர்
முதுகுன்றடை வோமே. 2
__________________________________________________
அ விடம் என்றது
அத்தகைய ஆலகாலவிடம் எனச் சுட்டு, பெருமை
யுணர்த்தி நின்றது.
தொத்து - கொத்து.
மணிமுத்தாறு மலர், சந்தனம், குங்குமப்பூ முதலிய
காணிக்கைகளைக் கொண்டுவந்து சமர்ப்பித்து
அடிவணங்குகிறது என்பதாம்.
2. பொ-ரை: தழைகளுடன்
கூடிய ஆலமர நீழலில் யோகியாய் வீற்றிருந்து தவம்
செய்யும் சிவபிரான், போகியாய் நூலிழை போன்ற
இடையினை உடைய உமையம்மையோடு மகிழ்ந்துறையும்
இடம், மேகங்கள் வானின்கண் இடித்தலைக் கேட்டு
யானையின் பிளிறல் எனக்கருதி அழகிதாய் வளைந்த
ஒளி பொருந்தி விளங்கும் நகங்களையும் எரிபோலும்
கண்களையும் உடையனவாய்க் குகைகளில் வாழும்
சிங்கங்கள் கர்ச்சிக்கும் உயர்ந்த
திருமுதுகுன்றமாகும். அதனை வழிபடச் செல்வோம்.
கு-ரை: வடவிய
வீதனில் - ஆலமரத்தினது அகன்ற நீழலில்.
பதுமாசனத்திலிருந்து தவஞ் செய்கின்ற சைவன்
என்றது அநாதி சைவனாகிய சிவனை. இழையார் இடை -
நூலிழையை ஒத்த இடை. மழைவானிடைமுழவ - மேகம்
வானத்தில் பிளிற. முழவம் பெயரடியாக முழவ என்ற
வினையெச்சம் பிறந்தது. ஒலிக்க என்பது பொருளாம்.
எழில் வளை வாள் உகிர் - அழகிய வளைந்த ஒளி
பொருந்திய நகத்தையும்.
எரி கண் -
காந்துகின்ற கண்ணையும். முழை - மலைக்குகை. அரி -
சிங்கம். சிங்கம் உறுமுதல் மழை ஒலியை யானையின்
பிளிறல் என்று எண்ணி. மேருமலையின் வடபால்
தனித்து யோகத்திருந்த இறைவன் முதுகுன்றில்
உமையாளொடு போகியாக உறைகின்றான் என்றது.
|