121. விளையாததொர்
பரிசில்வரு
பசுபாசவே தனையொண்
தளையாயின
தவிரவ்வருள்
தலைவன்னது சார்பாம்
களையார்தரு
கதிராயிரம்
உடையவ்வவ னோடு
முளைமாமதி
தவழும்முயர்
முதுகுன்றடை வோமே. 3
__________________________________________________
3. பொ-ரை:
உயிர்களுடன் அநாதியாகவே வருகின்ற வேதனைகளைத்
தரும் பாசங்களாகிய ஒள்ளிய தளைகள் நீங்குமாறு
அருள்புரிதற்கு எழுந்தருளிய சிவபிரானது இடம், ஒளி
பொருந்திய கிரணங்கள் ஆயிரத்தைக் கொண்ட
கதிரவனும் முளைத்தெழுந்து வளரும் சந்திரனும் தவழும்
வானளாவிய மலையாகிய திருமுதுகுன்றமாகும். அதனை
அடைவோம்.
கு-ரை: விளையாதது
ஒருபரிசில்வரும் பசுபாச வேதனை ஒண்தளை - மீண்டும்
அங்குரியாதவாறு அவிந்ததாகிய ஒரு தன்மையில் வரும்
பாசங்களாகின்ற துன்பத்தைத் தருகின்ற ஒள்ளிய
கட்டு. பசுபாசம் - ஆன்மாக்களை அனாதியே பந்தித்து
நிற்கும் ஆணவமலக்கட்டு எனப்பாசத்திற்கு
அடையாளமாய் நின்றது. வேதனை - துன்பம் எனப்
பொருள் கொண்டு அதன் காரணமாகிய தீவினை
என்பாரும் உளர். அப்போது பாசவேதனை
உம்மைத்தொகை. பாசமும் வேதனையும் என்பது பொருள்.
வேதனைக்கு விளையாமையாவது பிராரத்தத்தை
நுகருங்கால் மேல்வினைக்கு வித்தாகாவண்ணம்
முனைப்பின்றி நுகர்தல். சார்பு - இடம். களை -
தேஜஸ். ஆயிரம் பன்மை குறித்து நின்றது. கதிர்
ஆயிரம் உடையவன் - சூரியன். சகத்திர கிரணன்
என்னும் பெயருண்மையையும் அறிக. செங்கதிரோடு
முளைமாமதி தவழும் முதுகுன்று என்றமையால்
பிள்ளையார் கண்ட காலம் வளர்பிறைக் காலத்து
மூன்றாம் நாளாகலாம் என்று ஊகிக்கலாம்.
குருவருள்: இறை, உயிர்,
தளை என்ற முப்பொருள்களும் என்றும் உள்ள உண்மைப்
பொருள்கள். ஒரு காலத்தே தோன்றியன அன்று.
இக்கருத்தையே "விளையாததொர் பரிசில்வரு
பசுபாச வேதனை ஒண்தளை" என்றார். இவை நீங்க
அருள்பவனே இறையாகிய தலைவன் என்று
குறிப்பிட்டுள்ளார். இதில் பசு - உயிர். பாசம் -
ஆணவம். வேதனை - நல்வினை தீவினையாகிய
இருவினைகள்.
|