பக்கம் எண் :

 15. திருநெய்த்தானம்391



பலமல்கிய பாடல்லிவை

பத்தும்மிக வல்லார்

சிலமல்கிய செல்வன்னடி

சேர்வர்சிவ கதியே. 11

திருச்சிற்றம்பலம்

______________________________________________________________________________________________

கு-ரை: பலம் மல்கிய பாடலிவை பத்தும் என்றது, முதல் நான்கு பாடலிலும் நெய்த்தானம் என்னுங்கள், உங்களை நடலையடையா, அமருலகு அடையலாம், துயரின்றித் தொழலாம், நோய் நலியா, அடையா, கழலேத்துதல் கதி என இம்மைப் பயனையும்; மறுமைப் பயனையும் எய்தலாம் என்கிறார்கள் ஆதலின். சில மல்கிய - சிலவே நிறைந்த. இறைவனடியைச் சில என்றதால் நிறைவு ஏது? மல்குதற்கேற்ற புண்ணிய வாய்ப்புடையன சிலவேயாதலின் இங்ஙனம் கூறினார்.

சீகாளத்திப் புராணம்

மேவ ரும்பர மானந்த வீட்டினுள்
தாவி னன்மணம் காணிய சார்ந்தவர்
யாவ ரும்புகு வித்தருள் செந்தமிழ்ப்
பாவ லன்மலர்த் தாள்முதல் பற்றுவாம்.

- மூவர்.

திருக்கழுக்குன்றப் புராணம்

கண்ணைப்பா டசையுமிரு கனங்குழையைக்

கமழ்குழலைக் கனகச் செப்பை

விண்ணைப்பா டகத்தாளைக் கழைத்தோளைக்

கலந்துதிரு மேனி தோன்றப்

பண்ணைப்பா டலத்தாறு பதம்பாடும்

பொழின்மயிலைப் பதியென் பாய

பெண்ணைப்பா டியபுகலிப் பிள்ளையைப்பா

டித்துயரம் பெயரச் செய்வாம்.

- அந்தகக்கவி வீரராகவப் புலவர்.