இடர் - பிணி - துயர் என
மூன்றாகக் குறித்துள்ளமை காண்க.
இடர் - விபத்தினால் வரும் துன்பம்;
பிணி - உடலில் நோயால் வரும் துன்பம்; துயர் -
மனத்தைப் பற்றிய துன்பம். இம்மூன்றும் அகலும்
என்கிறார்.
நிறைவுரை:
இன்னோரன்ன அரிய பல கருத்துக்களோடு
ஞானக்கருவூலமாக விளங்கும் திருஞானசம்பந்தர்
அருளிய இம்முதல் திருமுறை ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணியின்
அருளாட்சிக் காலத்தில் 1953ஆம் ஆண்டு தருமை ஆதீனப்
புலவர் மகாவித்துவான், பத்ம பூஷண், முனைவர்
திரு.ச.தண்டபாணி தேசிகரைக் கொண்டு எழுதிய
விளக்கக் குறிப்புரையுடன் ஸ்ரீ குருஞானசம்பந்தர்
குருபூசை விழா மலராக வெளிவந்தது.
இதுபோது பன்னிரு திருமுறைகளையும்
ஒளியச்சில்
ஒருசேர அச்சிட்டு வெளியிடும் முறையில் தருமை
ஆதீனப் புலவர், திருநெறிச் செம்மல் திரு.
வி.சா. குருசாமி தேசிகரைக் கொண்டு எழுதிய
பொழிப்புரை, செந்தமிழ்க்கலாநிதி, பண்டித
வித்துவான் திரு. தி. வே. கோபாலய்யரைக்
கொண்டு எழுதிய உரைத்திறம் ஆகியவற்றுடன், பன்னிரு
திருமுறைகளை உரையுடன் வெளியிட வித்திட்ட ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணியின்
குருபூசை வெள்ளிவிழா நினைவாக வெளியிடப் பெறுகிறது.
அன்பர்கள் ஓதி உணர்ந்தும், பிறர்க்குரைத்தும்
இம்மை மறுமை அம்மை என்னும் மும்மை நலங்களும் பெற்று
இனிது வாழச் செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச்
சிந்திக்கின்றோம்.
வாழ்க சிவநெறி! வளர்க
திருமுறை!
வாழ்க உலகெலாம்!
...............
|