பக்கம் எண் :

 பதிப்புரை43


குலைந்திருந்தது. தமிழ் நாட்டின் வடபகுதியில் மகேந்திரவர்ம பல்லவனும், தென்பகுதியில் நின்றசீர்நெடுமாற பாண்டியனும் சமண சமயம் சார்ந்து இருந்ததால் மக்களும் வேற்றுச்சமய நெறிகளை விரும்பத் தொடங்கியிருந்தனர். இறைவன் திருவருளால் இவ்விரு பெருமக்களும் தோன்றிச் சைவ சமயத்தைத் தமிழகத்தில் நிலைபெறச் செய்தனர்.

ஞானசம்பந்தர்:

ஞானசம்பந்தர் திருவவதாரத்தால் தமிழ் மொழி தழைத்தது. தமிழ்ச்சமய நெறியே உலகில் உயர்ந்தது என்பதை மக்கள் அறிந்து போற்றத் தொடங்கினர் எனக் கூறுகிறார் சேக்கிழார்.

அடங்கல் முறை:

மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களைப் பண்முறை, தலமுறை, வரலாற்று முறை என மூவகையாக அடைவு செய்வர். இவை அடங்கல் முறை எனப்படும். அடங்கல் - தொகுப்பு. இவற்றுள் பண்முறையே நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப்பெற்றது. இதுவே திருமுறை வரிசையில் ஒன்று இரண்டு முதலியனவாக எண்ணியுரைக்கும் நிலையில் உள்ளது. நம்பிகள் ஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாக அமைத்துத் தந்துள்ளார்.

முதல் திருமுறை:

இத்திருமுறையில் நட்டபாடை (22), தக்கராகம் (24), பழந்தக்கராகம் (16), தக்கேசி (12), குறிஞ்சி (29), வியாழக் குறிஞ்சி (25) மேகராகக் குறிஞ்சி (8) ஆகிய ஏழு பண்களில் 136 திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. இவற்றின் பாடல் எண்ணிக்கை 1469.

திருப்பதிகம்:

பதிகம் என்பதற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டது என்பது பொருள். பெரும்பாலானவை பத்துப்பாடல்களைக் கொண்டும் சில கூடியும் குறைந்தும் இருப்பினும் அவை பதிகம் எனவே பெயர் பெறும். ஞானசம்பந்தர் பதிகங்கள் பத்துப் பாடல்களுக்கு மேல், பயன்கூறும் திருக்கடைக்காப்புடன் பதினொரு பாடல்களைக் கொண்டதாய் விளங்குவன.