229. கரமுத லியவவ யவமவை
கடுவிட வரவது கொடுவரு
வரன்முறை யணிதரு மவனடல்
வலிமிகு புலியத ளுடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை
யிமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமனி தர்கள்பயில்
மறைவன மமர்தரு பரமனே. 2
__________________________________________________
சிலை - மந்தரமலை. சினம் மலி அரவு
என்றது வாசுகி என்னும் பாம்பை. திவிதலம் -
சுவர்க்கம். சலசல என்பது மத்தைக் கடையும்
போது உண்டாகும் ஒலிக்குறிப்பு. அவர் உடல்
குலைதர - அத்தேவாசுரர்கள் உடல் நடுநடுங்க.
மலைமலி மதில் - மலையை ஒத்த மதில்.
எல்லாத் தேவர்கட்கும் நடுக்கம் தந்த கடுவிடம்
இவர்க்கமுதாயிற்று என்றது சிவனது
அளவிலாற்றலையும் காக்கும் கருணையையும்
விளக்கியது.
2. பொ-ரை: கைகள் முதலிய
அவயவங்களில், கொடிய விடம் பொருந்திய
பாம்புகளைத் தொன்றுதொட்டுவரும் வரன் முறைப்படி,
வளை கேயூரம் முதலியனவாக அணி செய்து கொள்பவனும்,
கொலைத் தொழிலில் வல்லமை மிக்க புலியைக்
கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்தவனுமாகிய
பெருமான், இரவலர்களின் வறுமைத் துயர் போக
எல்லோரும் நினைக்கும் தேவருலகம் அழகு பெற வளரும்
கற்பகமரம் போன்ற கொடையாளர்கள் வாழும்
மறைவனம் அமர்பரமன் ஆவான்.
கு-ரை: இது கற்பகம் ஒத்த
கொடையாளர்கள் பயில்கின்ற மறைக்காட்டுறையும்
பரமனே எங்கும் அரவத்தை அணிந்து புலித்தோலாடை
புனைந்து விளங்குபவன் என்கின்றது. இதனால்
இறைவனது ஆடையும் அணியுங்கூறி அறிவித்தவாறு.
கரம் - கை. கடு விட அரவு அது கொடு -
கொடிய விடப்பாம்பைக் கொண்டு.
வரன்முறையணிதரும் அவன் - முறையாக
அவயவங்கட்கேற்றவாறு அணிபவன். அடல் வலி -
கொல்லும் வன்மை. துயர்கெடுவகை
நினைமனிதர்கள், இமையவர்புரம் எழில்பெற
வளர் மரம் எனக்கூட்டுக. மரம் என்றது
கற்பகத்தை.
|