பக்கம் எண் :

456திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


241. பூணற் பொறிகொ ளரவம் புன்சடை
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே. 3

242. தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ண மேத்தி வாழ்மினே. 4

__________________________________________________

3. பொ-ரை: அழகிய புள்ளிகளை உடைய பாம்பை அணிகலனாகக் கொண்டு, சிவந்த சடையின்மேல் வளைந்த பிறைமதியைச் சூடிய, என்றும் மாறா இளமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் திருக்கோலக்காவை மாட்சிமை தங்கப் பாடி, வேதங்களை அருளிய அப்பெருமானைப் பேணித் தொழப் பிணிகளானவை நீங்கும்.

கு-ரை: கோலக்காவில் குழகனைப் பேணப் பிணிகள் நீங்கும் என்கின்றது. பூண் நல் பொறிகொள் அரவம் - நற்பொறிகொள் அரவம் பூண் என மாற்றுக. குழகன் - இளமையுடையவன். மாண - மாட்சிமை மிக. பேண - மனத்துள் இடைவிடாது தியானிக்க. பறையும் - ஒன்றொன்றாக உருவமின்றிக் கெடும்.

4. பொ-ரை: பல்வேறு சமயங்களிலும் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களே! மழுவாயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட செல்வனும், மானை ஏந்திய அழகிய கையை உடையவனும், பூதங்களின் குழுக்களை உடையவனும் ஆகிய சிவபிரானது கோலக்காவைத் தவறாமல் சென்று தரிசித்து வாருங்கள். நும் பாவங்கள் அகலும்.

கு-ரை: பாவங்கள் தளர வேண்டுபவர்களே! கோலக்காவில் இறைவனைக் கும்பிட்டு வாழ்த்துங்கள் என்கின்றது.

தழுக்கொள் பாவம் - ஆணவமுனைப்போடு கூடிய ஆன்ம போதத்தால் தழுவிக் கொள்ளப்பட்ட பாவங்கள். இழுக்கா வண்ணம் - தவறாதபடி.