240. பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டா னஞ்சை யுலக முய்யவே. 2
__________________________________________________
தாங்கி, சாம்பலைப்பூசி, கீள்உடுத்து இருக்கின்ற
வடிவத்தைக் கொண்டது ஏனோ என்கின்றது.
தலமோ மாதர் நீராட வாளை மடையில்
பாயும் வளம் பொருந்திய தலம். அதற்கேற்ப இவர்
அணியணிந்து, சாந்தம்பூசி, பட்டுடுத்து
வாழாது இங்ஙனமாய திருக்கோலத்தைக் கொண்டதேன்?
கீளுடை - கீளோடு கட்டின கோவண உடை.
குருவருள்: இப்பாடலில் கீள் உடை என்பதே
சரியான பாடம். கீள் என்பது கீளப்பட்ட
அஃதாவது கிழிக்கப்பட்ட வாராகும். ‘கீளார் கோவணமும்‘
என்ற சுந்தரர் தேவாரமும் காண்க.
சடை இறைவனது எண்குணங்களுள் அளவிலாற்றலுடைமையைக்
குறித்தது. ‘கடுத்து வரும் கங்கைதனைக் கமழ்சடை
ஒன்று ஆடாமே தடுத்தவர்‘ என்ற பிள்ளையார்
வாக்கும் காண்க. எண்குணங்களுள் பிறை,
பெருமான் கருணையாளன் என்பதை நினைவுறுத்துகிறது.
தவறு செய்தவன் உணர்ந்தால் மன்னித்து அருள் வழங்கும்
கருணை இதில் புலப்படுதல் காணலாம். சாம்பற் பூச்சும், கீள்
உடையும் பரமனின் பற்றற்ற நிலையைக் குறிப்பன. எல்லாம் இருந்தும் தான் ஒன்றும்
அநுபவியாமல் யோகியாயிருந்து உயிர்கட்கு யோகநெறி
காட்டி விடுதலை செய்பவன் என்பதைக் குறிப்பது.
2. பொ-ரை: உமையம்மையைத் தன் திருமேனியில்
இடப்பாதியாகக்கொண்டு, கலைகள் ஒன்றொன்றாகக்
குறைந்து வந்த இளம் பிறையைச் சடைமுடி மீது ஏற்றுக்
கொண்டவனாகிய சிவபிரான், கோலக்காவிலுள்ள
கோயிலைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். திருப்பாற்கடலில்
நஞ்சு தோன்றியபோது
காவாய் என அனைவரும் கைகூப்பி வணங்க உலகம் உய்யுமாறு
அந்நஞ்சினை உண்டு அருளியவன்.
கு-ரை: இது கோலக்காவிற் கோயில்கொண்ட
இறைவன், எல்லாருந்தொழ, உலகம் உய்ய, கடல் நஞ்சை
உண்டான் என்கின்றது. நஞ்சுண்டது தம் வீரத்தை
வெளிப்படுத்தற்கன்று; உலகமுய்ய எழுந்த பெருங்கருணையைத்
தெரிவித்தவாறு.
|